நிரந்தர நியமனத்திற்கான திகதியை தெரிவிக்குமாறு கோரி வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.
வடமாகாணத்தினைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று (புதன்கிழமை) காலை முதல் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த பல காலங்களாக தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், வடமாகாண ஆளுநரின் செயலாளரினால் அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக நிரந்தர நியமனத்திற்கான அறிவுறுத்தல்கள் வடமாகாண ஆளுநருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
ஆனாலும், இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அறிவித்தல்கள் வழங்கப்பாத நிலையில், தமக்கான நிரந்தர நியமனத்திற்கான திகதியை வழங்குமாறு வலியுறுத்தி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
இந்த ஆண்டு நிறைவு பெறும் நிலையில் இருப்பதனால், இந்த ஓரிரு தினங்களுக்கும் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கான திகதியை அறிவிக்குமாறும், எந்த இடையூறுகள், கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.