மகதலேனா என்ற இடத்தைச் சேர்ந்தவள் மரியாள். மரணம் அடைந்த பின்னர் இயேசு உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு சூரியன் உதயமாகிய அந்த காலை நேரத்தில் சென்றாள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இல்லாததால் கதறி அழுதாள். அப்போது இயேசு அவளுக்கு தரிசனமாகி, ‘ஸ்திரியே! ஏன் அழுகிறாய்? யாரை தேடுகிறாய்?’ என்றார்.
மரியாள், அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணினாள். இயேசு அவளை நோக்கி ‘மரியாளே!’ என்றார். அவள் திரும்பிப் பார்த்து ‘ரபூனி’ (போதகரே) என்றபடியே தன் கையால் அவரைத் தொட முயன்றாள்.
‘என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை’ என்றார் இயேசு.
மரித்த இயேசுவை அந்த அதிகாலை வேளையிலே தேடின காரணத்தினால், உயிரோடு எழுந்த இயேசுவைக் கண்டாள் மரியாள்.
இந்த நிகழ்வு பற்றி விவிலியம் குறிப்பிடும்போது, ‘அவர்கள் அதைக் கேட்டு அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம் பண்ணினார்கள்’ (அப்.5:21) என்கிறது.
இயேசு உயிரோடு எழுந்த ஆச்சரியத்தைக் கண்ட சீடர்கள், இயேசுவை பற்றி தேவாலயத்தில் சாட்சியம் கூற ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட பிரதான ஆசாரியனும், சதுசேயரும் ஒன்றாக சேர்ந்து, அப்போஸ்தலர்களை பிடித்து சிறையிலே பூட்டி வைத்தார்கள்.
ஆனால் கர்த்தருடைய தூதனோ, இரவில் சிறைச்சாலையின் பூட்டை உடைத்து, கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விட்டான். மேலும் ‘நீங்கள் அதிகாலையில் தேவாலயம் சென்று, மக்களுக்கு ஜீவ வார்த்தைகளை பிரசங்கம் செய்யுங்கள்’ என்றும் கூறினான்.
அதன்படியே அப்போஸ்தலர்களும் அதிகாலையிலே தேவ ஆலயத்திலே பிரசங்கித்து, ஜீவ வார்த்தைகளை மக்களுக்கு சொன்னார்கள். அப்போது தேவனின் மகிமை வெளிப்பட்டது. அப்போஸ்தலர்களின் வழியாக மக்களுக்கு அநேக அற்புதங் களையும், தேவ அடையாளங்களையும் இறைவன் உண்டாக்கினார்.
இதைக் கேள்விப்பட்ட மக்கள், திரளான நோயாளிகளையும், அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்கு அழைத்து வந்தார்கள். நோயாளிகளை கட்டில்களின் மேல் கிடத்தி, வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். அப்போது ‘பேதுரு’ என்ற அப்போஸ்தலர் அந்த வழியாக நடந்து சென்றார். அவரது நிழல் பட்ட நோயாளிகள் அனைவரும் குணமானார்கள். ஏனெனில் அப்போஸ்தலர்கள் அனைவரும், தேவனிடம் அதிகாலையில் ஜெபத்தின் மூலம் பேசி தங்களை பெலப்படுத்தி கொண்டார்கள்.
அப்போஸ்தலர்களைப் போன்று நாமும் அதிகாலையிலே வேதத்தை வாசித்து, தேவனை துதிக்கும்போது, நமக்கு விரோதமான எல்லா நோய்களும், கஷ்டங்களும் மாறிப்போகும்.
‘அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு,
வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்’ (மாற்.1:35).
இந்த இறை வசனம், மனிதராக பிறந்த இறைமகனும் அதிகாலையில் ஜெபம் செய்தார் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இறைமகனும் கூட, அதிகாலை ஜெபத்தின் மூலம் தந்தையுடன் பேசி தன்னை பெலப்படுத்திக் கொண்டிருக்கிறார். தன்னை அதிகாலை ஜெபத்தினால் பெலப்படுத்திக் கொண்டதால், இயேசு பல அற்புதங்களைச் செய்தார்.
ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்த ஒருவன் இருந்தான். இயேசு அவனைப் பிடித்திருந்த ஆவியை அதிகாரத்தோடே வெளியேற கட்டளையிட்டார். உடனே அசுத்த ஆவி அவனை விட்டுப் போய்விட்டது.
மேலும் பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டிருந்த அநேகரை இயேசு சுகப்படுத்தினார். அநேகமான பிசாசுகளைதுரத்திவிட்டார். குஷ்டரோகியின் மேல் கை வைத்து, மனமுருகி ‘நீ சுத்தமாகு’ என்று சொன்னவுடன், அவனது குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கியது.
இவ்வாறாக அதிகாலை ஜெபத்தினால் பெற்ற பெலத்தினால், மக்களின் நோய்களையும், கஷ்டங்களையும் இயேசு விரட்டி அடித்தார். இயேசுவை போன்றே அதிகாலையில் நாம் தேவனைத் தேடும்போது வல்லமையும், அதிகாரத்தையும் பெறுகின்றோம்.
‘அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும் உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்’ (சங்.143:8).
அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு, அவருடைய கிருபை நிச்சயமாக கிடைக்கும். தன் மீது விழும் மழையை, வறண்ட நிலமானது தன்னால் இயன்றவரை உறிஞ்சிக் கொள்ளும். அவ்வாறே நம்மால் முடிந்தவரை கர்த்தரோடு அதிகாலையில் உறவாடவேண்டும். அப்பொழுது தேவனின் மகிமையைக் காணமுடியும்.
சங்கீதக்காரன் தாவீது ராஜா அதிகாலையில் தேவனை தேடினான். எனவே தாவீது போன எல்லா இடத்திலும் இறைவன் அவனோடு இருந்து, அவன் எதிரிகளை எல்லாம் அவனுக்கு முன்பாக நிர்மூலமாக்கினார்.
‘ஏழாம் நாளில் அதிகாலமே கிழக்கு வெளுக்கும் போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்’ (யோசுவா 6:15).
கர்த்தர், யோசுவாவை நோக்கி, ‘எரிகோ பட்டணத்தையும், அதன் ராஜாவையும், யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்’ என்றார். எரிகோ பட்டணத்தை சுற்றி, உயரமான மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் கைப்பற்ற முடியாத, வலுவான கோட்டையாக இருந்தது எரிகோ பட்டணம்.
யோசுவா கர்த்தரின் வார்த்தையை கூறினான். ‘யுத்த புருஷராகிய இஸ்ரவேலர் அனைவரும் ஆறுநாள் அதிகாலை வேளையிலே எரிகோ பட்டணத்தை சுற்றி வாருங்கள். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழு முறை சுற்றிவரக் கடவர்கள். ஏழு கொம்பு எக்காளங்களை தொனிக்கும் போது மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக் கடவர்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும்’ என்றான்.
இறைமகனின் வாக்குப்படியே, ஆறு நாள் கோட்டையை அதிகாலை வேளையிலேயே சுற்றி வந்தார்கள். ஏழாம் நாள் அதிகாலையிலே ஏழு முறை சுற்றி வந்து, எக்காளங்களை ஒலிக்கச் செய்தார்கள். அப்போது பட்டணத்தின் வலுவான மதில் இடிந்து விழுந்தது. தேவன் சொன்னபடி அதிகாலை வேளையிலே இஸ்ரவேல் மக்கள் எரிகோ கோட்டையை கைப்பற்றினார்கள்.
எரிகோவைத் தகர்த்த தேவன், எதையும் தகர்க்க வல்லவர். அதிகாலையில் தேவனை தேடும் போது, எரிகோ மதில் போன்ற பெரிய பிரச்சினைகள் நம்மை சூழ்ந்து இருந்தாலும், அவற்றை தேவன் தகர்த்தெரிவார். நமக்கு விரோதமான ஆயுதங்கள் வாய்க்காத போதும், தேவன் தாமே நம்மை கரம் பிடித்து நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையில் ஜெபம் செய்யுங்கள். இறைவனின் வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்