கண்களில் அழுக்கு படிந்து அவை வெள்ளை நிறத்தில் வெளியேறுவதை நாம் கவனித்திருக்கலாம். பொதுவாக நாம் உறங்கும் போது கண்களின் உட்புற ஓரங்களில் அழுக்கு படித்திருக்கலாம். காலையில் எழுந்தவுடன் நாம் கண்களைத் துடைத்து அந்த அழுக்கை வெளியேற்றி விடுவோம்.
அடிப்படையில் இந்த அழுக்கு என்பது சளி, எண்ணெய் மற்றும் சரும அணுக்களின் ஒருங்கிணைப்பு ஆகும். சில நேரங்களில் ஈரத்தன்மையுடனும், ஓட்டும் தன்மையுடனும் இருக்கும் இந்த அழுக்கு சில நேரங்களில் வறண்டும் காணப்படலாம். இந்த அழுக்கு வெளியேற்றத்தின் போது எவ்வளவு திரவம் ஆவியானது என்பதை பொறுத்து இதன் தன்மை மாறுபடும். இதனை கண் ஊளை என்றும் கூறுவர்.கண்களில் அழுக்கு வெளியேறுவதன் மூலமாக கண்கள் பாதுகாக்கப்படுகிறது. கண்களில் படியும் கழிவு பொருட்கள் கண்களுக்கு உள்ளே செல்ல முடியாமல் கண்களின் முன் பக்கத்திலேயே தடுக்கப்படுவதால் இதன் பங்கு மிகவும் முக்கியமானது.
கண்களில் இருந்து வெளியேற்றப்படும் சளி ஒரு குறிப்பிட்ட அளவு இருக்குமாயின் அதில் எந்த ஒரு தவறும் இல்லை.அதுவே அந்த கழிவு மிக அதிக அளவு இருந்து அதன் நிறம் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் சில கோளாறுகளின் அறிகுறியாக இருக்கும் என்பதால் கண் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த அழுக்கு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனைப் போக்க சில வழிகள் ஆகியவற்றை இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்வோம்.
கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுவதற்கான காரணங்கள்:
காலையில் தூங்கி எழுந்தவுடன் கண்களில் காணப்படும் ஒரு சிறு அளவு அழுக்கு என்பது எந்த நேரமும் தீங்கு இழைப்பதில்லை. இரவில் ஒரு நபர் உறங்கும் போது கண்களில் சுரக்கப்படும் அழுக்கு வெளியேறுவது இல்லை. இருப்பினும் அதிக அளவு அழுக்குடன், கண்கள் சிவந்து போவது, கண்களில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவை தொற்று பாதிப்பின் அடையாளமாக இருக்க முடியும். அந்த நேரத்தில் கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
பாக்டீரியாவால் உண்டாகும் கண் வலி, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் கண் வலி, கருவிழியில் உண்டாகும் தொற்று போன்றவை சில பொதுவான காரணங்களாகும். அரிப்புடன் கூடிய அழுக்கு வெளியேற்றம் ஏற்பட மற்றொரு காரணம் ஒவ்வாமை பாதிப்பாக இருக்க முடியும். மேலும் கண்களில் வெண்மை நிற அழுக்கு வெளியேற்றம் மற்றும் கண்ணீர் வழிவது போன்றவை ஏற்பட மற்றொரு காரணம் கண்களை அடிக்கடி கசக்குவதாக இருக்கலாம் அல்லது முறையற்ற வகையில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம்.
கண் அழுக்கு வெளியேற்றத்திற்கான சிகிச்சை:
கண் அழற்சி அல்லது விழிவெண்படல அழற்சி போன்றவை சில தீவிர கண் பாதிப்பை உண்டாக்கலாம். கண்களில் எரிச்சல், கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் இல்லாமல் கண்களில் அதிக அழுக்கு வெளியேற்றம் மட்டும் இருக்கும் என்றால் கண்களில் விடும் சொட்டு மருந்து நல்ல தீர்வைத் தர முடியும். கண்களை ஈரப்பதத்துடன் வைக்க இந்த மருந்து உதவுகிறது. மேலும் அதிக அழுக்கு படர்ந்து வெளியேறாமல் தடுக்கிறது.
ஒரு நாளில் நான்கு முறை கண் மருந்தை பயன்படுத்தலாம். இந்த வகை வழக்குகளில் லுபிரிக்கண்ட் ஜெல் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் இதனை பயன்படுத்தலாம். இருப்பினும், அதிக அளவு அழுக்கு வெளியேறுவதால், இதனுடன் கண்களில் அதிக அசௌகரியம் உணரப்பட்டால், அழுக்கின் நிறம் பச்சை மற்றும் மஞ்சளாக இருந்தால் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதனால் இந்த அறிகுறிகளுக்கான பாதிப்பு பற்றி சரியாக கண்டறிய முடியும். ஒவ்வாமை, தொற்று பாதிப்பு, காற்றில் இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த மாசு பொருட்கள், காண்டாக்ட் லென்ஸ் போன்றவை இந்த பாதிப்பின் காரணங்களாக இருக்க முடியும்.
கண்களில் அதிக அழுக்கு வெளியேறுவதைத் தடுக்க சில குறிப்புகள்:
கண்களில் அதிகமான அளவு அழுக்கு வெளியேறுவதை தாங்கி கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் மேலும் இது அதிகரிக்காமல் இருக்க சில பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகிறது. சில குறிப்பிட்ட வழிகள் மூலம் இந்த முழு பாதிப்பையும் தடுக்க முடியும். அதற்கான சில குறிப்புகளை இப்போது நாம் காணலாம்.
1. கண்களை சுற்றி இருக்கும் பகுதிகளில் மற்றும் கண்களில் ஒப்பனை பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
2. உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. கண்களை அதிகமாக தேய்க்க வேண்டாம்.
4. மாசு மற்றும் தூசு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் போது கண்களை மூடும் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ளவும்.
5. லுபிரிக்கன்ட் ஜெல் பயன்படுத்துவது குறித்து உங்கள் கண் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.
முடிவு
இதுவரை இந்த பதிவில், கண்களில் அதிக அழுக்கு வெளியேறுவதற்கான காரணம், மற்றும் அதற்கான சிகிச்சை மற்றும் அதனை போக்குவதற்கான வழிகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொண்டோம். இது எல்லாவற்றிற்கும் மேலாக கண் மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சரியான தடுப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்வதன் மூலம் கண்களை பாதுகாக்க முடியும்.