அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் ஜனாதிபதி டிரம்ப் கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சட்டப்போராட்டங்களுக்காக குடியரசுக் கட்சி 60 மில்லியன் டொலர்கள் வரை திரட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் பிரச்சாரக் குழுவினர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு, இந்த நிதி திரட்டும் விவகாரம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் குடியரசுக் கட்சியின் உயர்மட்ட குழு இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
ஜோ பைடன் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, குடியரசுக் கட்சி இதில் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தொடர்ந்து சட்டப்போராட்டங்களுக்காக 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்டும் நோக்கில் தங்கள் ஆதரவாளர்களுக்கு மின் அஞ்சல் அனுப்ப தொடங்கினர்.
மட்டுமின்றி ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான சட்டப்போராட்டங்களுக்காக ஒரு குழுவையும் குடியரசுக் கட்சி நிறுவியுள்ளது.
அதே வேளை, தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் ஜோ பைடன் அதிக தொகை திரட்டியுள்ளதாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே டொனால்டு டிரம்பால் திரட்ட முடிந்தது என்றும் மத்திய தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் தொடுத்த வழக்குகளை அங்குள்ள நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.
மேலும், பென்சில்வேனியா, ஜார்ஜியா மற்றும் நெவேடா மாகாணங்களில் வெற்றியின் விளிம்பில் இருக்கிறார் ஜோ பைடன்.
இதனால் தற்போது 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கும் ஜோ பைடன் உறுதியாக ஜனாதிபதி பொறுப்புக்கு வருவார் என்றே நம்பப்படுகிறது.