வடமாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்களில் 337 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், பெருமளவு தீர்மானங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்றைய தினம் மாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான இறுதி அமர்வாக 74ம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான வி.சிவயோகம், க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அவர்கள் விடயம் தொ டர்பாக மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் நிறைவடையும் நிலையில் சுமார் 300 ற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவற்றில் பல தீர்மானங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடியதாக இருந்த போதும் அவை தொடர்பாக நடவடிக்கை எவையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீள் பரிசீலணை செய்து மேல் நடவடிக்கை எடுக்க கூடியவை தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழு ஒன்றை நியமிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்களில் சுமார் 74 அமர்வுகளை நடத்தப்பட்டுள்ளதுடன், 337 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.