அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் மீது ட்ரம்ப், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத அவர், தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டார். நேற்றிரவு பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஜோ பைடன் அதிபராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து, துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். இதன்மூலம், அமெரிக்க தேர்தல் வரலாற்றில், முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றியை அடுத்து, அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு, தொலைபேசி மூலம் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, நாம் சாதித்து விட்டோம் என கூறிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் அடுத்த அதிபர் நீங்கள்தான் என தெரிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோவையும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மற்றொரு பதிவில், இன்னும் செய்ய ஏராளமான பணிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.