தற்போது கொரோனாவால் அநேக மக்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்கிறார்கள். இதனால் நாள் முழுவதும் அலுவலக வேலை செய்ய வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். இப்படி சற்றும் ஓய்வு கிடைக்காமல் தூங்கும் வரை அலுவல வேலை, வீட்டு வேலை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என பலவற்றை ஒரே வீட்டில் இருந்து கொண்டே சமாளிப்பது என்பது ஒருவித மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் தான் ஏற்படுத்துகிறது.
ஒருவர் பதட்டமாக இருக்கும் போது சாப்பிடும் குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் பானங்கள், அந்த பதட்ட அளவை மோசமாக்கும் என்பது தெரியுமா? அதோடு அந்த சமயத்தில் சாப்பிடும் சில உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மோசமாகவும் பாதிக்கும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பதட்டத்தின் போது சாப்பிடும் குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும் தீவிரமான உணர்ச்சியின் சுழற்சியை உண்டாக்கிய, பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
எனவே பதட்டத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை நீங்கள் டென்சனாக இருக்கும் சமயத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
கேக்குகள் மற்றும் குக்கீஸ்
பதட்டம் ஒருவரது இரத்த சர்க்கரை அளவோடு நிறைய தொடர்புடையது. எனவே சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது, அது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் இது மக்களில் பதட்டத்தையும் அதிகரிக்கும். எனவே டென்சனாக இருக்கும் போது கேக், குக்கீஸ், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை சர்க்கரை நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்.
சர்க்கரை நிறைந்த பானங்கள்
சர்க்கரை நிறைந்த உணவுகள், பானங்கள் போன்றவையும் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, பதட்டத்திற்கு வழிவகுக்கும். பல பழச்சாறுகளில் போதுமான நார்ச்சத்து இல்லாமல் நிறைய சர்க்கரை நிறைந்துள்ளது. நார்ச்சத்து குறைவான டயட் பெரும்பாலும் அஜீரணத்திற்கு வழிவகுப்பதுடன், இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.
புரோட்டீன் இல்லாத ஸ்மூத்திக்கள்
பொதுவாக ஸ்மூத்திகள் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். ஆனால் சில சமயங்களில் அவற்றில் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் புரோட்டீன் இல்லாத போது, அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் அல்லது குறைக்கும். இதனால் பதட்டம் மற்றும் கவலை போன்ற உணர்வுகளை வளர்ப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
காப்ஃபைன் நிறைந்த பானங்கள்
ஒரு ஆய்வின் படி, காபி, டீ மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற காப்ஃபைன் நிறைந்த பானங்களைக் குடிப்பவர்களிடம் தான் பதட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. காப்ஃபைன் புற மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களில் அடினோசின் ஏற்பிகளை செயல்படுத்தி, மக்களிடம் பதட்டத்தைத் தூண்டிவிடுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அஜீரண பிரச்சனைகள் மற்றும் வயிற்றில் அழற்சியை உண்டாக்கி, பதட்டத்திற்கு வழிவகுக்கும். இதற்கு இவற்றில் உள்ள குறைந்த அளவிலான நார்ச்சத்து தான் காரணம். இது தான் குடலின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டைத் தடுக்கிறது.
ஆல்கஹால்
பலரும் மது பானங்கள் நரம்புகளை சாந்தப்படுத்த உதவுவதாக நம்புகின்றனர். ஆனால் உண்மையோ இதற்கு எதிர்மாறானது. உண்மையில், ஆல்கஹால் இரத்த சர்க்கரை அளவில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தி, அதை அருந்துவோருக்கு தூக்கமின்மையை உண்டாக்குகிறது. கூடுதலாக, ஆல்கஹால் உடல் வறட்சி, ஹேங் ஓவர் போன்றவற்றிற்கு வழிவகுத்து, பதட்டம் மற்றும் மன அழுத்த உணர்வைத் தூண்டிவிடுகிறது.