தற்போது சர்க்கரை நோய் மக்களிடையே ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஏற்கனவே உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கையில், அதற்கு சமமாக சர்க்கரை நோயும் ஒரு பெரிய ஆரோக்கிய கவலையாக உள்ளது.
டைப்-2 சர்க்கரை நோய் என்பது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் காரணமாக ஏற்படக்கூடியது. சொல்லப்போனால் உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் அதிகம் உள்ளது.ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டும் முக்கியமானது அல்ல. ஒரு நோய் வருவதற்கான அபாயத்தை தடுப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவைக் கவனிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு வகையான சர்க்கரையாக உடலில் சேரும். அதே சமயம், இப்ப்பிரச்சனை உள்ளவர்கள் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமான உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
புளி
சமையலில் புளி முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான உணவுகளில் புளி சேர்க்கப்படுகிறது. நல்ல புளிப்புச் சுவையுடன் இருக்கும் புளி ஒரு நார்ச்சத்துள்ள பழம். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி3 போன்றவை மிகவும் அதிகமாகவும், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் பி5, ஃபோலேட், காப்பர் மற்றும் செலினியம் போன்றவையும் அடங்கும்.
உணவில் கவனம் தேவை
டைப்-2 சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவு முறையில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்துவது, அவர்களின் இரத்த சர்க்கரை பராமரிப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் சர்க்கரை நோயாளிகளை உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை மோசமான அளவில் உயர்த்தும். எனவே தான் சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு உணவை உண்பதற்கு முன்பும், அது பாதுகாப்பானதா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
டைப்-2 சர்க்கரை நோயாளிகள் புளி சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு புளி நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது உண்மை தானா என்று பலரும் யோசிக்கலாம். உண்மையில் புளி நாள்பட்ட சர்க்கரை நோயாளிளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் புளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 23 தான் உள்ளது. இது மிகவும் குறைவான அளவாக கருதப்படுகிறது. அதே சமயம் புளியில் நார்ச்சத்து மட்டுமின்றி, பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த பண்புகள் ஒட்டுமொத்த புளியை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகிறது மற்றும் சட்டென்று இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்காது என்பதையும் உறுதி செய்கிறது.
புளி விதை சாறுகள் மிகவும் பயனுள்ளது
புளி விதையின் சாறுகள் இயற்கையாக அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை மற்றும் அவை இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கவும், கணைய திசுக்களின் சேதத்தை மாற்றியமைக்கக்கூடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் புளியில் ஆல்பா அமைலேஸ் என்னும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் நொதிப்பொருள் இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்போது புளியின் பிற நன்மைகளைக் காண்போம்.
எடை இழப்பிற்கு உதவும்
புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு ஏவுதும் இல்லை. ஆய்வுகளும் தினமும் சிறிது புளியை சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவி புரிவதாக பரிந்துரைக்கிறது. மேலும் புளியில் ஹைட்ராக்ஸிசிக்ரிக் அமிலம் உள்ளது. இது பசியுணர்வைக் குறைக்கும்.
பெப்டிக் அல்சரைத் தடுக்கும்
பெப்டிக் அல்சர் மிகவும் வேதனையாக இருக்கும். இவை அடிப்படையில், வயிறு மற்றும் சிறு குடலின் உட்புறத்தில் தோன்றும் புண்களாகும். ஆனால் புளி சாப்பிட்டால், அதில் உள்ள பாலிஃபீனோலிக் பண்பு, அல்சரைத் தடுக்கும்.
செரிமானத்திற்கு உதவும்
பழங்காலத்தில் புளி ஒரு மலமிளக்கியாக பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் இதில் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. புளிக்கு அடிவயிற்று தசைகளை ரிலாக்ஸாக்கும் திறன் உள்ளதால், வயிற்றுப்போக்கு நிவாரணியாக பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு புளி ஒரு நல்ல நிவாரணப் பொருள்.
ஆரோக்கியமான இதயம்
புளி இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பொருள். புளியில் உள்ள ப்ளேவோனாய்டுகள் , உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களின் தேக்கம் தடுக்கப்படும். மேலும் புளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும்.