அனைவருக்குமே நல்ல பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற விருப்பம் இருக்கும்.
ஆனால் அந்த பாக்கியம் ஒருசிலருக்கே கிடைக்கிறது. உடலினுள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதைத் தவிர்க்கவும் முடியாது. அப்படி பலர் தீர்வு எதுவும் கிடைக்காதா என்று தவிக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகத்தில் குழிகள் காணப்படுவது. இது திறந்த சருமத் துளைகள் மூடாமல் இருப்பதால் உண்டாவதாகும்.
அதை எப்படி முழுமையாக சரிசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.
இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகளைப் பற்றி தான். வாருங்கள் பார்ப்போம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், திறந்துள்ள சருமத் துளைகள் சுருங்க ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் உள்ள குழிகள் தானாக மறைந்துவிடும்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை இறுக்க உதவுவதோடு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும். அதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட்செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி
நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலால் பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்னும் நொதி, திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவி புரியும்.
வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழத் தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்தால், வாழைப்பழத் தோலில் உள்ள லுடீன் மற்றும் பொட்டாசியம், சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கும்.
தேன்
தேன் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி கிளின்சரும் கூட. இது மூக்கு மற்றும் கன்னங்களில் திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவக்கூடிய பொருளும் கூட. அதற்கு தேனை தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிய பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.