ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓராண்டு காலம் அவகாசம் வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச நீதவான்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்று நிறுவப்பட வேண்டியது அவசியமானதாகும் என ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்பினை சமர்ப்பித்தல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய நிபந்தனைகளை நிறைவேற்றினால், தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் ஓராண்டு கால அவகாசத்தை வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளதுடன் இதுவரையில் கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் போர்க் குற்றச் செயல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.