தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தொடர்ந்தும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் அவர் மிகுந்த விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் பாராட்டுகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் நிலைப்பாட்டினை வரவேற்று வந்தார்.
இதேபோல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சம்பந்தனின் நிலைப்பாட்டிற்கு பல தடவைகள் பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றார்.
இவரது காலத்திற்குள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கண்டு விட வேண்டும் என்று அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
அத்துடன் சம்பந்தனின் நிலைப்பாடு தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இரா. சம்பந்தன் சிறந்த அரசியல் தலைவராவார்.
அவர் இருக்கும்போதே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அவருடனான பேச்சுவார்த்தைகளின்போது அவர் சமஷ்டிக் கோரிக்கையை அல்லது தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததில்லை.
அத்துடன் இந்த நாடு பௌத்த நாடு என்பதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். பௌத்தத்திற்கான முன்னுரிமையை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கோரிக்கை விடுக்கப் போவதில்லை என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.
இவ்வாறாக மிகவும் மதிக்கப்படும் சம்பந்தன் போன்ற ஒரு அரசியல்வாதியிடம் இருந்து இத்தகைய கருத்துக்கள் வெளியாகும்போதே நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் ஆகும். சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருக்கும் காலப்பகுதியில் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒருபோதும் குறைக்கப்படமாட்டாது.
அதேபோல் சமஷ்டியோ அல்லது வேறு எந்த வழியினூடாகவோ நாட்டைப் பிரிக்க இடமளிக்கமாட்டோம். வடக்கு, கிழக்கு அல்லது வேறு எந்த மாகாணங்களையும் இணைக்கவும் இடமளிக்கமாட்டோம்.
எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் வாதிகள் கூறுவது போல் ஒற்றையாட்சி நீக்கப்படவோ சமஷ்டி முறை ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்பதை மகாநாயக்க தேரர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என்றும் அமைச்சர் அமரவீர இந்த மக்கள் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேபோன்றே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்க தரப்பினரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மிகுந்த விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு வருவதனால் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதில் முரண்பாடு எழப்போவதில்லை என்ற வகையிலேயே அரச தரப்பினரின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சமஷ்டியை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவுள்ளது.
கடந்த வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின்போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் மிகத் தெளிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி மொழி வழங்கியிருந்தது.
இதற்கிணங்கிய வகையிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண் டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாகவே தெரிகின்றது.
ஆனாலும் தென் பகுதி பெரும்பான்மையின மக்களின் சம்மதத்துடனான தீர்வொன்றை காண வேண் டும் என்பதனால் சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பின் தலைமை முன்வந்திருக்கின்றது.
ஆனாலும் அந்த விட்டுக் கொடுப்பானது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதாக அமைய முடியாது என்ற விடயத்தில் கூட்டமைப்பு தலைமை உறுதியாகவுள்ளதாகவே தெரிகின்றது.
அரசாங்க தரப்பினர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள விடயங்கள் இதனை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
எமது மக்களுக்கான தீர்வானது ஒற்றையாட்சிக்குள் ஏற்பட முடியாது. புதிய அரசியல் அமைப்பிற்கு பெருவாரியான மக்களின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக, எமது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க முடியாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் தற்போது சில முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதனை குழப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. வீணான சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்குரிய காலம் இதுவல்ல. நாங்கள் அந்த விடயங்களை பெரிதுபடுத்துவதற்கு விரும்பில்லை.
தமிழீழத்தை சம்பந்தன் கோரவில்லை. சமஷ்டியை சம்பந்தன் கோரவில்லை என்றே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஒற்றையாட்சிக்குள் தேசிய பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இணங்கி விட்டோம் என அவர்கள் கூறவில்லை.
அப்படி என்றால் அதன் அர்த்தம் என்ன? நாம் எத்தனையோ தடவைகள் தென்னிலங்கை தலைவர்களை சந்தித்தபோது ஒற்றையாட்சிக்குள் எமது மக்களுக்கான தீர்வை எட்ட முடியாது என்பதை தெளிவாக கூறியிருக்கின்றோம்.
எமது மக்களுக்கு ஏற்புடைய நியாயமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்களி டத்தில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என்றும் கூறியிருக்கின்றார்.
சம்பந்தனின் இந்தக் கருத்தானது ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதை அழுத்தி உரைப்பதாகவே உள்ளது. ஆனால், அரசாங்க தரப்பினரோ ஒற்றையாட்சிக்குள் மட்டுமே தீர்வு என்பதை அடிக்கடி தெரிவித்து வருகின்றனர்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் தனி மாகாண ஆட்சி உருவாக்கவோ அல்லது ஒற்றையாட்சியை சிதைக்கவோ இடமளிக்கப்படமாட்டாது.
எனவே ஒற்றையாட்சியின் கீழ் இந்த நாட்டில் சிறுபான்மையினத்தவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு தீர்வை பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம் என்று தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கத்தின் சகல அமைச்சர்களும் இத்தகைய கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா . சம்பந்தன் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண முடியாது என்ற விடயத்தில் உறுதியாகவே இருக்கின்றார்.
அப்படியாயின் தீர்வு என்பது எப்படி சாத்தியமாகப் போகின்றது என்ற கேள்வி தற்போது எழுகின்றது.தற்போதைய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு அரசாங்க தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமையானது தமிழ் மக்கள் சார்பில் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பதற்கே வழிவகுத்து வருகின்றது.
எனவே, இவ்வாறான பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதி லும் தீர்வொன்றை கண்டுவிட வேண்டும் என்பதற்காக கூட்ட மைப்பின் தலைமை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த ஒத்துழைப்பை உரிய வகையில் பயன்படுத்த அரசாங்கம் தவறினால் நாட்டில் நிரந்தர சமாதானம் என்பது சாத்தியமாற்றதாக போய்விடும்.
இந்த விடயத்தில் கூட் டமைப்பின் தலைமையின் விட்டுக்கொடுப்பை மதித்து அரசாங்க தரப்பு செயற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக்காண முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.