உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசு உறுதியுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை கோரியுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டை இலங்கை அரசாங்கம் நாளை சமர்ப்பிக்கும் நிலையில் சர்வதேச மன்னிப்புசபை இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து கடந்த பெப்ரவரியில் இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.
இதனையடுத்து காணாமல் போன அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கரிசனை ஏற்பட்டுள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
மோதலில் இருந்து மோசமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள், அவர்கள் நீண்டகாலமாக போராடிய உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த இரண்டு அலுவலங்களும் வழிமுறைகளாக இருந்தன.
எனவே நாட்டின் வரலாற்றில் இந்த இருண்ட காலத்தின் அத்தியாயத்தை மூடுவதற்கு இரு நிறுவனங்களும் திறம்பட செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள தீர்வை வழங்குவதற்காக அந்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான நிதியை பாதீட்டின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒதுக்கவேண்டும்.
2019 நவம்பரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்தி, அவர்களை மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க உதவும் என்ற அச்சத்தில், அரசாங்கம் அலுவலகத்தை நிறுவும் சட்டத்தை மறுஆய்வு செய்யப்போவதாகவும் கூறியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வரலாறு, உண்மை, நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, குற்றவாளிகளை பொறுப்புக்கூறவைத்தல் போன்றவற்றின் தோல்வி உதாரணங்களால் நிரம்பியுள்ளது.
எனவே காணாமல் போன அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவற்றுக்கான போதுமான வளங்களை அளித்து அவற்றை முழுமையாக இயக்கச்செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.