எல்லா வருடமும் குரு பெயர்ச்சியின் போது பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே அல்லது பக்தர்களிடையே எப்போதும் இருக்கும்.
இதற்கு மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா? குருபகவான் நன்மைகளை செய்யக்கூடிய கிரகமாக இருக்கிறார்.
குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்பது போல, குரு பெயர்ச்சியின் பிறகு ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுடைய ராசிக்கு அவர் நன்மைகளை கொடுப்பாரா என்ற ஏக்கமும், ஆர்வமும் இருந்து வருகிறது.
இந்த ஆண்டு வருகின்ற 20ஆம் தேதி நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நடைபெற இருக்கிறது. மகர ராசி என்பது சனியின் ஆட்சி வீடாக அமைந்திருப்பதால் குருபகவான் அங்கு நீசம் அடைகிறார்.
மேலும், குரு பகவான் நீசம் அடைவதால் பெரும்பாலும் எந்த ராசியினருக்கும் அமோக பலன்கள் கிடைக்காது.
ஓரளவு சுமாரான நல்ல பலன்களை மட்டுமே கொடுப்பார். 12 ராசிக்காரர்கள் மட்டுமல்லாமல் குரு பகவான் நீசம் அடைவதால் உலக அளவிலும் பாதிப்புகள் ஏற்படும்.
2021-ல் உணவு பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எவ்வளவோ பேர் எவ்வளவோ எடுத்துரைத்தும் விவசாயத்தின் மேல் அக்கறை காட்டாதவர்கள் இனி வரும் காலங்களில் தாமாகவே அக்கறை செலுத்த துவங்கி விட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
வீட்டிலும் நன்மைகள் நடைபெற குரு பெயர்ச்சியின் பொழுது 12 ராசிக்காரர்களும் குரு பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
இதையடுத்து, குரு பெயர்ச்சிக்கு முன்னரே வரும் வியாழன் கிழமை அன்று இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
குரு பகவானுக்கு உகந்த வியாழனில் நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.
குரு தட்சிணாமூர்த்திக்கு குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். அங்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் நிற கொண்டைக்கடலை தானம் செய்து வாருங்கள்.
குரு பகவான் இருக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்களில் இருக்கும் ராசியினருக்கு பலன்களை அள்ளித் தருவார் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு வியாழன் அன்றும் முடிந்தவரை மஞ்சள் நிறத்தை ஆடையாக உடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் மஞ்சள் நிறம் தெரியும்படி பொருட்களை அமைத்து வையுங்கள்.
மஞ்சள் நிறத்தால் பேப்பர்கள் ஒட்டி வைப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். காலை, மாலை இருவேளையும் சூரிய கதிர்கள் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் பொழுது சூரிய நமஸ்காரம் செய்து வர குருவின் அருளைப் பெறலாம்.