அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் இடம்பெற்ற வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பதாதை மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில், மற்றப்பட்டுள்ள புதிய பதாதையில், ஜெயலலிதாவுடன் சசிகலா இருப்பது போன்று புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அதில், ‘ அம்மா அவர்களின் ஒரே அரசியல் வாரிசு, எங்கள் தியாகி தலைவி சின்னம்மா’ என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகி நிலையில், ஜெயலலிதாவிற்கான இரங்கல் தீர்மானம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியினால் வாசிக்கப்பட்டது.
அதன்படி பொதுக் குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை முதல்வர் பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளராக செயற்பட சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில், புதிய பதாதை போடப்பட்டுள்ளது.