பிரான்சில் வரும் 27-ஆம் திகதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது, இருப்பினும் கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனால் எதிர்வரும் நவம்பர் 27-ஆம் திகதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத வர்த்தக நிலையங்கள், மதுச்சாலைகள், போன்றவைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரான்சின் வர்த்தக சங்கங்களின் ஆலோசனைக் கூட்டமைப்பான CDCF (fédérations de commerçants Conseil du Commerce de France) விடுத்துள்ளது.
இதையடுத்து இது குறித்து அமைச்சர் ஒலிவியே வெரோன் கூறுகையில், இந்தத் தொற்றின் குறைவானது நிரந்தரமானது என்பதோ, அல்லது எச்சரிக்கைகளைக் கைவிடுவதோ சாத்தியமற்றதாகவே உள்ளது.
இன்னும் 10 நாட்களில், கொரோனாத் தொற்றின் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கான தரவுகள் எதுவும் என்னிடம் இல்லை. அதனால் எந்த வாக்குறுதியும் தரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.