பெல்ஜியம் நாட்டில் புறா ஒன்று இந்திய மதிப்பில் 14 கோடிக்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் புறா பந்தயம் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சீனாவில் புறா பந்தயத்திற்கு அதிக மவுசு உள்ளது.
இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த புறா பந்தயத்தில் நியூ கிம் என்கிற இரண்டு வயது பெண் புறா ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 14.12 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 17 ஆயிரத்துக்கு தொடங்கியநிலையில், இருவர் குறித்த புறாவை வாங்க போட்டி போட்டதையடுத்து 1.6 மில்லியன் யூரோவுக்கு சீன நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.
இதன் இந்திய மதிப்பு சுமார் 14.12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்ன இந்த புறாவில் விசேஷம் என்றால், நியூ கிம் என்கிற இந்த புறா, 2018-ம் ஆண்டில் பல்வேறு பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதில் தேசிய அளவிலான குறுகிய தூர பந்தய போட்டிகளும் அடங்கும். இதன் பின்பு இந்த புறா ஓய்வு பெற்று விட்டது.
பொதுவாக இதுபோன்ற பந்தய புறாக்கள் தங்களது 10 வயது வரை குஞ்சுகளை பொறிக்கமுடியும் என்பதால் இந்த புறாவை வைத்து இனப்பெருக்கம் செய்து, அதன் மூலம் சம்பாதிப்பதற்காக இந்த புறாவை அதன் புது உரிமையாளர் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட முதல் பந்தைய புறா என்ற பெருமையும் இந்த புறாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.