காதலர் தினத்தன்று தனது மனைவியை தீ வைத்துக் கொலை செய்த குற்றவாளிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று (18) இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
திருகோணமலை – இல. 38/1 பாடசாலை வீதி, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹெந்த ஹேவகே அனுர இஷாந்த என்பவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 14ஆம் திகதி காதலர் தினத்தன்று கந்தளாய் – அக்போபுர பகுதியில் மனைவி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ இணைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது தான் குறுக்கே வந்ததால் தானாகவே எரிந்து கொண்டதாக குற்றவாளி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த குற்றத்திற்காக 2019ஆம் ஆண்டு 04ஆம் மாதம் 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவர் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் ஏற்படுத்தியமைக்காக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 296 பிரிவின் கீழ் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
குறித்த குற்றவாளிக்கு சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திறந்த நீதிமன்றில் தமது தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.
இந்நிலையில் குறித்த குற்றவாளி தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் விளைவித்தமை தொடர்பில் இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.