இந்தியாவின் மகேஷ் சவானி என்ற தொழிலதிபர் கிறிஸ்மஸ் தினத்தன்று தந்தையை இழந்த வறுமை நிலையிலுள்ள 236 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த திருமண நிகழ்வு டிசம்பர் 25 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 100,000க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த திருமண நிகழ்வில் மணப்பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் என இல்லறம் நடத்த தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இது குறித்து வைர வியாபாரியான மகேஷ் சவானி கூறும்போது, “கடந்த வருடம் இதே போன்று தந்தையை இழந்த 151 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
2008ஆம் ஆண்டு முதல், தந்தையை இழந்து பிற ஆதரவுகளும் கிடைக்காமல் இருக்கும் பெண்களின் திருமணத்துக்கு உதவி புரிந்து வருகிறேன். இதனால் சுமார் 800 பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கின்றனர். அவர்களுக்கு நான் வளர்ப்புத் தந்தையாகி உள்ளேன்.
சமூக சேவை செய்யும் குடும்பப் பின்னணியிலிருந்து நான் வந்தமையால், வறுமை நிலையிலிருக்கும் பெண்களுக்கு உதவி செய்து வருகிறேன்.
ஒவ்வொரு பெண்ணையும் என் மகள் போல நினைத்து செலவு செய்துள்ளேன். யாராவது மகளின் திருமணத்தை நடத்த கணக்கு பார்ப்பார்களா-? எனவே நான் எந்தக் கணக்கும் பார்க்கவில்லை.
கடந்த வருடம் நடத்தப்பட்ட திருமணத்துக்கு 5 கோடி வரை செலவு செய்தேன். இந்த வருடம் இந்தத் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு எனது பணியாளர் ஒருவர் அவரது மகளின் திருமண நிகழ்வுக்கு முன்னதாக இறந்து விட்டார்.
அப்போதிலிருந்து தந்தைகளற்று வறுமையிலிருக்கும் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்து வருகிறேன்.
உதவி புரிவதில் நான் இந்து, கிறிஸ்தவர், முஸ் லிம் என மத வேறுபாடோ, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடோ பார்ப்பதில்லை.
யார் என்னிடம் உதவி கோரினாலும் அவர்களை வரவேற்பேன். என்னிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்களின் தந்தையின் இறப்பு சான்றிதழை மட்டுமே கேட்கிறேன்.
இந்த மிகப் பெரிய திருமண விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஜோடிக்கும் மகேஷ் சவானி நகைகள், புத்தாடைகள் கொடுத்து வாழ்த்தினார்.
அத்தோடு திருமணமான ஒரு பெண் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது, கொண்டு செல்ல வேண்டிய சீர்வரிசைப் பொருட்களுக்கான அனைத்து செலவுகளையும் மகேஷ் சவானியே ஏற்றுக் கொண்டார்.
இதுவரை குஜராத்தைச் சேர்ந்த, 800 இளம் பெண்களுக்கு மகேஷ் சவானி திரு மண உதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.