அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கும் நபர்கள் பகலில் மைத்தியுடனும் இரவில் மகிந்தவுடனும் இருப்பதாகவும் இவர்கள் “பகலில் மிகேல் இரவில் டேனியல்” பாத்திரத்தில் நடிப்பவர்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சூப்பர் பவர் அமைச்சர்களை உருவாக்கும் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை. சூப்பர் பவர் நாட்டை உருவாக்கும் தேவையே கட்சிக்கு உள்ளது.
புதிய சட்டமூலத்தை எதிர்ப்போர், பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்றவர்கள் சூப்பர் பவர் அமைச்சர் வாழ்க்கை வாழ்ந்த போது எதனையும் வாய்திறந்து பேசவில்லை.
அபிவிருத்திச் சட்டமூலம் மாகாண சபைகளில் தோல்வியடைந்தாலும் அது மீண்டும் கொண்டு வரப்படும்.
சூப்பர் பவர் அமைச்சு என்று அமைச்சுக்கள் எதுவுமில்லை. நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது.
குளியாப்பிட்டிய வோக்ஸ்வேகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கலை ஜனவரி 3ஆம் திகதி பிரதமர் நட்டு வைப்பார். இதனுடன் மேலும் சில தொழிற்சாலைகளுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
டிலான் பெரேரா தற்போது ஊடகங்களுக்கு முன்னால் வீரராக மாறியுள்ளார்.
அவரது தொகுதியான ஹாலி – எலவுக்கு சென்று 12 பேரைக் கூட திரட்ட முடியாத அவர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு வெட்ட சென்று மூக்குடைப்பட்டுள்ளார் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்க உள்ள ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தின் மூலம் 4 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
சூப்பர் பவர் அமைச்சரின் அமைச்சுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறப்படும் கதையில் உண்மையில்லை.
அதேபோல் பசில் ராஜபக்சவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எந்த உடன்பாடுகளும் இல்லை என காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கும் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சதி செய்கின்றனர்.
வைபவங்களில் ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமையில்லை என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி தெரிவு செய்த ஜனாதிபதியின் உருவப்படத்தை பயன்படுத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமையுள்ளது எனவும் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.