தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சீ.வீ.கே, ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன், வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம் சார்பாக வேந்தன் (ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர்) உட்பட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர் .
கொரோனா அபாயம், மாவீரர் நினைவஞ்சலியை தடுத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாப்பு படைகளின் மூலம் நசுக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வரும் நிலையில், நீதிமன்றங்களின் ஊடாக நினைவேந்தல் தடையை ஏற்படுத்தி வரும் நிலையில் எவ்வாறான அணுகுமுறையை கடைப்பிடிப்பதென ஆராயப்பட்டது.
நவம்பர் 27 ம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என்றும், மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளலாமெனவும் கருத்து கூறப்பட்டது.
எதிர்வரும் 24 ம் திகதியன்று அனைத்து கட்சிகளும் கூடி, தாயக மக்களை தெளிவுபடுத்துவது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிடப்படவுள்ளது. இதில், 27ஆம் திகதி வீடுகளில் இருந்து, வாசல்களில் தீபமேற்றுமாறு அழைப்பு விடுக்கப்படும்.