தமிழகத்தில் சாலையில் படுத்து தூங்கி ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நபர் இன்று கனடாவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள நிலையில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டொரோண்டாவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன் ( 50). கனடாவின் சிறந்த சமையல் நிபுணரானவர்.
கடந்தாண்டு ஒரு பெரிய ஹொட்டலை துவக்கிய இவர் கோடீஸ்வரர் ஆவார்.
கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது சிறுவயது கஷ்டங்கள் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல அனுபவமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக ஷாஸ் சாம்சன் கூறுகையில், தென்இந்தியாவில், ஜவுளி நகரமான கோவையில், ரயில்வே டிராக் ஒட்டியிருந்த குடிசை பகுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வந்தேன்.
தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. ஒருநாள் பேருந்து நிலையத்தில் என்னை சகோதரர்கள் விட்டு சென்றனர்.
அதன்பின், அவர்களை நான் பார்க்கவில்லை. எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் சுற்றி திரிந்தேன்.
அங்குள்ள ஹொட்டல் முன் தினமும் அமர்ந்து கொள்வேன். அங்கு குப்பை தொட்டியில் மீதமாகும் உணவுகளை கொட்டுவார்கள். அதை சாப்பிட்டு வளர்ந்து வந்தேன்.
இரவு நேரங்களில் சினிமா தியேட்டர் முன் படுத்து துாங்கினேன்.
ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் என்னை பார்த்து விசாரித்து, மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த ஒரு நிமிடம் தான், என் வாழ்க்கையை மாற்றியது. அந்த காப்பகத்தில் எட்டு வயதாக இருந்த என்னை, 1979ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த சாம்சன் தம்பதி தத்தெடுத்தனர்.
கனடாவில் எனது விருப்பம்போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் உணவுக்காக அலைந்ததால், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என, விரும்பினேன். இதன்படி எனது வளர்ப்பு பெற்றோர் சமையல் கலை பிரிவு படிக்க வைத்து, தற்போது பெரிய ஹொட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன்.
அன்று நான் ரோட்டில் சுற்றித்திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்காவிட்டால், எனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது. தற்போது என்னைபோல் உள்ள, 22 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.