ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 900 பேர் இறந்துள்ளனர். 28,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், கொரோனா தொற்று பெரியளவில் பரவிவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீட்சா கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சொன்ன ஒரு பொய்யால்தான் ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்திருப்ப சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீட்சா கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீட்சா கடையில் வேலை பார்ப்பதை மறைத்து, பீட்சா வாங்கச் சென்றதால் கொரோனா தொற்று ஏற்பட்டது என பொய் கூறியுள்ளார்.
பீட்சா கடையில் வேலை பார்ப்பதை சொன்னால், கடையை மூடிவிடுவார்கள் என எண்ணி இவ்வாறு பொய் கூறியதாக கூறப்படுகிறது.
இவ்வளவு குறுகிய நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதா என்ற அதிர்ச்சியில், அவசர அவசரமாக 6 நாட்களுக்கு தெற்கு ஆஸ்திரேலியா முழுவதுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பீட்சா கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. அவருடன் இந்த இளைஞர் தொடர்பில் இருந்ததாலே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இதனால் 6 நாள்கள் போடப்பட்ட ஊரடங்கை சனிக்கிழமையுடன், மூன்று நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டனர்.
இச்செய்தியை அறிந்த தெற்கு ஆஸ்திரேலியாவின் சுமார் 1.7 மில்லியன் மக்கள், சம்பந்தப்பட்ட பீட்சா கடை மீது கடும் கோபமடைந்துள்ளனர். இதனால் அந்த பீட்சா கடைக்கு போலீசார் பலத்த பாதுகாப்பை அளித்து வருகின்றனர்.