மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(23) திறக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் சி. கபில பெரேரா தெரிவித்தார்
இன்றைய தினம் ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கே மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர்,சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பாடசாலைகளை தொடர்ந்தும் மூட முடியாதென்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கிணங்க மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஆளணியினர் வீட்டிலிருந்து புறப்படும் போதும் பாடசாலைகளுக்குள் பிரவேசிக்கும் போதும் கைகளை கழுவுவதுடன் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைக்குள் செல்லும்போதும் அங்கிருந்து வெளியில் வரும் போதும் பாடசாலை நுழைவாயில்களில் நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
பாடசாலையில் எவருக்காவது வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அவர் உடனடியாக அங்கு தனிமைப்படுத்தப் படுவதுடன் அதனையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அவருக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுபவர்கள் பாடசாலைக்குச் சமுகமளிக்காமல் இருப்பது சிறந்ததாகும்.
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்