இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மற்றும் பொது ஒழுங்கிற்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் 43 செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பயனர்களால் இந்த செயலிகளை பயன்படுத்துவதற்க்கான தடை உத்தரவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜூன் மாதம் 59 செயலிகளுக்கும், செப்டம்பர் மாதம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் மேலும் 118 செயலிகளுக்கும் தடை செய்யப்பட்டன. அதில், டிக்டாக் , பப்ஜி போன்ற செயலிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.