நுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி நெட்பொன் தோட்டத்துக்கு வந்துள்ளார்.
கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குறித்த நபரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வண்டி வந்துள்ளது. எனினும், குறித்த தோட்டத்தின் வீதி குன்றும் குழியுமாக இருந்ததனால் அம்புலன்ஸ் வண்டி குறித்த இடத்திற்கு செல்லவில்லை. இதனால் கொரோனா தொற்றாளர் சுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து வந்தே அம்புலன்ஸில் ஏறியுள்ளார். அதன்பின்னர் அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.