முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவையொட்டி அவர் மீது பாசம் வைத்திருந்ததாகவும் அதனால் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாகவும் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று அவருடைய செல்போனுக்கு கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். மூலம் வந்தது. இதையொட்டி ஆனந்தராஜ் நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கொலை மிரட்டல் காரணமாக உடனடியாக நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையொட்டி நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது:-
நான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது அதிகம் பாசம் வைத்திருந்தேன். அவர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை விட்டு விலகினேன். நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை. இந்த நிலையில் ஒரு நடிகருடன் சுற்றிக்கொண்டிருக்கும் நபர் எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் அல்ல.
எனக்கு கொலை மிரட்டல் வந்ததையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கொலை மிரட்டல் குறித்து கேட்டறிந்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விசாலும் கொலை மிரட்டல் குறித்து விசாரித்தார். எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.