உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி போன்றவற்றை சந்தித்தால், அது சைனசிடிஸின் அறிகுறியாக இருக்கலாம். சைனசிடிஸ் என்பது சைனஸ் காற்று பைகளில் உள்ள திசுக்களின் வீக்கம் அல்லது அழற்சி ஆகும்.
எப்போது இந்த சைனஸ் பைகள் திரவத்தால் நிரப்பப்பட்டு அடைக்கப்படும் போது, அங்கு கிருமிகள் வளரவும், தொற்றுக்களை ஏற்படுத்தவும் அனுமதிக்கிறது.
பொதுவான சளி, ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் விலகிய செப்டம் ஆகியவை சைனஸ் அடைப்பை ஏற்படுத்தும் பொதுவான நிலைமைகள் ஆகும். உடலில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் சைனஸ் சவ்வுகளையும் பாதிக்குமா என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
உங்களுக்கு மூக்கு ஒழுகல் இருக்கும் போது, உடலில் அதிக சளியை உருவாக்கும் உணவுகளை உட்கொண்டால், அது நிலைமையை மோசமாக்கும். கீழே சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
யோகர்ட்
யோகர்ட் மற்றும் பாலில் உள்ள கேசின் என்னும் பொருள், சளியை உடனடியாக உருவாக்கி, மூக்கடைப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் அல்லது குளிர்காலத்தில் யோகர்ட் அல்லது தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
குளிர்பானங்கள்
சைனஸ் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். குளிர்ச்சியான உணவுகள் அல்லது பானங்கள் வீக்கத்தை உண்டாக்குவதோடு, அழற்சியை அதிகரிக்கும். கூடுதலாக, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் குளிர் பானங்களான கோலா போன்றவற்றில் உள்ள பிற செயற்கை சுவையூட்டிகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, சளி உற்பத்தியை அதிகரிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தான். ஆனால் இந்த பழத்தை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது சிலருக்கு ஹிஸ்டமைனைத் தூண்டி, உடலில் சளியின் உற்பத்தியை அதிகரிக்கும். ஹிஸ்டமைன் என்பது ஒவ்வாமையை எதிர்கொள்ளும் போது உடல் செல்கள் வெளியிடும் ஒரு கெமிக்கல் ஆகும். இது மூக்கு ஒழுகுதல் அல்லது தும்மல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளுக்கு காரணமாகும்.
சாதம்
இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடாதீர்கள். ஏனெனில் இதில் குளிர்ச்சி பண்புகள் இருப்பதால், இது சைனஸ் அழற்சியைத் தூண்டிவிடும். அதோடு சைனஸ் பிரச்சனை இருந்தால் இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள்.
மோனோசோடியம்
க்ளுட்டமேட் இது ஆசிய உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சுவையை அதிகரிக்கும் உணவுச் சேர்க்கையாகும். ஏற்கனவே சில ஆய்வாளர்கள் மோனோசோடியம் க்ளுட்டமேட் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் நாள்பட்ட அழற்சியைத் தூண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் புரோட்டீன் அதிகளவு உள்ளது. இது உடலில் சளி தேக்கத்தை அதிகரித்து, உங்களுக்கு இருக்கும் சைனஸ் அறிகுறிகளை மேலும் மோசமாக்கும். ஆகவே இந்த மாதிரியான இறைச்சியை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
தக்காளி
வைட்டமின் சி அதிகம் நிறைந்த தக்காளி, உடலில் ஹிஸ்டமைன் உற்பத்தியைத் தூண்டி, அதிகளவு சளி உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். அதோடு, தக்காளியில் அதிகளவு அசிடிட்டி உள்ளதால், இது ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல. மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்கு பயணித்து வரும் போது, அது தொண்டையில் வீக்கத்தை உண்டாக்குவதுடன், அதில் சளியையும் ஒட்ட வைக்கும்.