சிங்கப்பூரில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையின் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Celine Ng-Chan என்ற அந்த பெண்ணுக்கு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் கர்ப்பமுற்றிருந்தார்.
இந்நிலையில், இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யும்போது, குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், அந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளன. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது.
காரணம், கொரோனா தொற்றிய ஒரு கர்ப்பிணிப்பெண், தான் கர்ப்பமுற்றிருக்கும்போதோ அல்லது பிரசவிக்கும்போதோ தன் கருவிலிருக்கும் குழந்தைக்கு கொரோனாவை பரப்ப முடியுமா என்பது இதுவரை தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று வரை, ஒரு கர்ப்பிணியின் கருவிலிருக்கும் குழந்தையைச் சுற்றியிருக்கும் திரவத்திலோ அல்லது அவரது தாய்ப்பாலிலோ கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் ஒரு அபூர்வ சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள், அவர்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அவர்களது உடல் கொரோனா ஆன்டிபாடிகளை உருவாக்கியிருந்தது.
அவர்களது பெற்றோர் ஒரு திருமணத்திற்கு சென்றபோது அவர்களுக்கு கொரோனா தொற்றியது, ஆனால், அந்த குழந்தைகள் அந்த திருமணத்துக்கு செல்லவில்லை.
அந்த குழந்தைகள் மூவரும், தங்கள் பெற்றோருக்கு கொரோனா இருந்தாலும், அவர்களுடன் நெருக்கமாகவே இருந்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை, அதே நேரத்தில் அவர்களுக்கு கொரோனா ஆன்டிபாடிகள் மட்டும் இருந்துள்ளன. இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த குடும்பத்திலுள்ள அனைவரது எச்சிலிலிலும் கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.