யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்து, மாணவர் ஒழுக்காற்றுச் சபை சமர்ப்பித்த அறிக்கை வெளியில் கசிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் துணைவேந்தர் ஊடகப்பிரிவு சற்று முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்மந்தமாகப் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
குறித்த அநாமதேய அறிக்கை ஒழுக்காற்றுக் குழுவின் முழுமையான அறிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களைத் துறை ரீதியாகப் பெயர் குறிப்பிட்டும், மாணவர்களை இனங்காட்டியும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீதான நம்பகத் தன்மையைப் பாதிப்பதாகவும் அமையக் கூடாது எனத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீடத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ” யாழ் பல்கலை கலைப்பீட மோதல் : மாணவர்களைத் தண்டிப்பதுடன் நின்றுவிடாமல் நிர்வாகக் குறைபாடுகளையும் சீர்செய்ய பரிந்துரை! என்ற தலைப்பில் எமது செய்தித் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பல்கலைக்கழகத்தின் கற்கைத் துறை ஒன்றில் இருந்து தொலைபேசி வாயிலாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தச் செய்தி தனிப்பட்டவர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக வரையப்பட்டது” என்று சாரப்பட அந்த மறுப்பு அமைந்திருந்தது.
அதனால், பொறுப்புள்ள செய்தி ஊடகம் என்ற வகையில் குறித்த மறுப்புக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
1. எமது ஊடகத்தில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் தகுந்த ஆதரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுகின்றன. அநாமதேயமாகக் கிடைக்கும் தகவல்களைச் செய்தியாக்கும் வழக்கம் எமக்கில்லை.
2. குறித்த செய்தி “பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தொடர்பில், பேரவைக்குச் சமர்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் சாராம்சத்தின் அடிப்படையிலேயே வரையப்பட்டது. 28.11.2020 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆங்கில மொழி மூல அறிக்கையைத் தழுவியே அந்தச் செய்தி வரையப்பட்டது.
3. குறித்த அறிக்கை கலைப்பீடத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் 11.11.2020 ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் ” தமிழில் – தெளிவாக” விவரிக்கப்பட்ட , சம்பந்தப்பட்ட பீடத்தையும், துறையையும் சாடி எழுதப்பட்ட பந்திகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களைப் பற்றி 18.11.2020 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட ஆங்கில மொழி மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களே செய்தியில் தமிழில் தரப்பட்டன.
4. பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் 20 உறுப்பினர்களும், பேரவை 31 உறுப்பினர்களும் ஆராய்ந்த ஒரு அறிக்கையில் – எழுத்து மூல ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் “காழ்ப்புணர்ச்சியில்” எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட ( தனிநபர் ஆயத்தின் 130 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்ட, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் அறிக்கை) ஆவணங்களை வெளியிடுவதற்கு எமது தளம் தயாராகவே இருக்கிறது.
5. செய்தியில் தவறுகள் ஏதுமிருப்பின் பேரவையின் தலைவர் என்ற வகையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரோ, பதிவாளரோ அன்றில் அன்றைய கூட்டத்தில் இருந்த பேரவை உறுப்பினர்கள் – பீடாதிகதிகளில் ஒருவரோ உத்தியோக பூர்வமாகச் செய்திக்கு மறுப்பு அனுப்பியிருப்பாராயின் தவறை ஆய்ந்தறிய வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. ஆனால், அறிக்கைகளில் நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரே செய்தியை மறுப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
வழக்கம் போலவே, தமது பக்கங்களில் இருக்கின்ற “சூத்தை”களை மறைப்பதற்கு மற்றவர்களை “மடக்கிக்குத்தும்” வேலையில் ஒரு சிலர் இறங்கியிருப்பது, அண்மைக் காலமாக சமூகத்தில் பல்கலைக்கழகம் பற்றிய பார்வையில் ஏற்படும் மாற்றத்தைப் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.