ஸ்ரீராம நவமி :
ராமர் அவதரித்த தினம், ஒவ்வொரு ஆண்டின் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும். அதையே ஸ்ரீராம நவமி என்பார்கள். ராமபிரான் திருமாலின் அவதாரங்களில் ஒரு அவதாரத்தில் உதித்தவர். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் உலகுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ராமபிரானைத் திருமாலின் அவதாரமாகக் கருதாமல் முழு முதல் கடவுளின் அவதாரமாகவே எண்ணுகிறார்கள். இந்த எண்ணத்தோடு ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருப்போர் பலர்.
ஸ்ரீராம நவமியை வடநாட்டிலும் தென்னாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டங்கள் பத்து நாட்கள் நடைபெறுவதுண்டு. பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன் பத்து எனப்படும். பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்படும் பத்து நாட்கள் பின் பத்து எனப்படும். இந்த நாட்களில் பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். ராமாயணம் படித்து பட்டாபிஷேக விழா நடத்துவார்கள். எல்லோருக்கும் பானகம், நீர், மோர், சந்தனம், சுண்டல் முதலியன வழங்கப்படும்.
அனந்த பத்மநாப விரதம் :
ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தசியில் இந்த விரதம் வரும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி, செல்வம் பெருகும் முறைப்படி விரதம் இருந்து, பூஜை செய்து, பதினான்கு முடி போட்ட மஞ்சள் கயிற்றை குங்குமத்தில் நனைத்து, பத்மநாப சுவாமியிடம் வைத்து, அதிரசம் வைத்துப் படைத்த பின், அந்தக் கயிற்றை இடது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் செய்து பதினான்காம் ஆண்டில் அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் ஆயுள் பூராவும் அனுஷ்டிக்கலாம். அனந்த பத்மநாபன் அருளால் ஆனந்தமான பாக்கியத்தைப் பெறலாம். பாண்டவர்கள் நாட்டையும் சகலத்தையும் துறந்து துன்பப்பட்ட போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தர்ம புத்திரரிடம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அவர்களும் அனுஷ்டித்து, மீண்டும் நாட்டையும் இதர பாக்கியத்தையும் அடைந்தார்கள்.
மகா விஷ்ணுவுக்கு உகந்த சிரவண விரதம் :
சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும். இத்தினத்தில் உபவாசம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும் துவாதசி அன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். பொதுவாக ஏகாதசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி அன்று பாரணம் செய்ய வேண்டியிருப்பதால் அன்று உபவாசம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் சிரவண துவாதசி அன்று விசேஷ விதியாக உபவாசம் இருக்க வேண்டும். இதனால், நம் பாவங்கள் விலகி நம் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்வு பெற்று நலமாக வாழலாம்.
புரட்டாசி சனிக்கிழமை :
புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டில் மிக, மிக சக்தி வாய்ந்ததாகும். புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் அவர் மனதில் இடம் பிடிக்க முடியும். அன்றைய தினம் வீட்டில் பூஜை அறையில் கோலம் போட்டு, அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.
இரு பக்கங்களிலும் குத்து விளக்கை ஐந்து முகம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரிய பொருட்களை சேகரித்து வைத்து ராகுகால, எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கு ஏற்றி, பக்தியுடன் பூஜிக்க வேண்டும். நிவேதனம் – சர்க்கரை பொங்கல் வடை, எள் சாதம் ஆகும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று, மாவிளக்கேற்றி விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.
புரட்டாசி மாதம் முதல் வார சனி இரண்டாவது சனிவாரம், மூன்றாவது வாரம், ஐந்தாவது வாரம் இவைகளில் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் அனுஷ்டிக்க வேண்டும். திருமலையில் பகவானின் நவராத்திரி உற்சவம் நடக்கும்போது சனிக்கிழமை விரதம் அனுஷ்டிக்க கூடாதென்றும், எனவே மற்ற சனிக்கிழமை ஏதாவது ஒன்றில் நடத்த வேண்டும்.
ஏகாதசிகளில் மார்கழி மாதம் வரும் இந்த ஏகாதசியைப் பெரிய ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். இந்த நாளில் விஷ்ணு ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப்பார்கள். அன்று ஆலயங்களுக்கு செல்வோர் இந்த சொர்க்க வாசல் வழியே உள்ளே செல்ல வேண்டும். இந்த வாயில் மூன்று நாட்களுக்குத் திறந்திருக்கும். அதன்பிறகு மூடிவிடுவார்கள்.
அன்றைய தினம் உபவாசமிருந்து இரவு கண் விழித்து மறுநாள் விடியற்காலையில் பாரணை செய்து விரதம் முடித்தால் பரமபதம் செல்வர் என்று கூறுவர்.
2016-ல் வைகுண்ட ஏகாதசி விரத நாள் இல்லை. ஏனெனில் 2015-ல் ஜனவரி 1-ந்தேதியும் டிசம்பர் 21-ந்தேதியும் என இரண்டு தடவை வைகுண்ட ஏகாதசி வந்துள்ளது. எனவே 2016-ல் வைகுண்ட ஏகாதசி விரதம் இல்லாமல் ஆகிவிட்டது. 2017-ம் ஆண்டும் ஜனவரி 9 மற்றும் டிசம்பர் 29-ந்தேதிகளில் 2 தடவை வைகுண்ட ஏகாதசி வர உள்ளது.