ஜேர்மனி நாட்டில் சாலையின் மையத்தில் நின்று காதலர்கள் முத்தம் கொடுப்பதை பார்த்த வாலிபர் ஒருவர் அவர்கள் மீது காரை ஏற்றி காதலியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Frankfurt என்ற நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாலையில் 26 வயதான வாலிபர் ஒருவர் காரில் சென்றுள்ளார்.
அப்போது, சிக்னலுக்கு அருகில் உள்ள சாலையை கடக்கும் இடத்தில் (Zebra Crossing) காதலர்கள் இருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு அங்கேயே நின்றுள்ளனர்.
இக்காட்சியை கண்ட வாலிபர் சில வினாடிகள் காத்திருந்தார். ஆனால், காதலர்கள் அங்கிருந்து விலகிச் செல்லாததை கண்டு ஆத்திரம் அடைந்த வாலிபர் காரை வேகமாக அவர்களை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
எனினும், இரண்டு மீற்றர் தொலைவிலேயே காரை திடீரென நிறுத்தியுள்ளார். ஆனால், இந்த நிலையிலும் காதலர்கள் இருவரும் பிரிந்து செல்லாமல் மெய் மறந்து முத்தம் கொடுத்த நிலையில் நின்றுள்ளனர்.
ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற வாலிபர் காரை வேகமாக ஓட்டிச்சென்று இருவர் மீதும் ஏற்றியுள்ளார். இச்சம்பவத்தில் 38 வயதான நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆனால், கார் சக்கரத்தில் சிக்கிய 40 வயதான பெண் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார்.
பொறுமையை இழந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வாலிபர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.