இந்தியன் லீக் பிரீமியர் லீக் இருபதுக்கு: 20 கிரிக்கெட் தொடரில் இரு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் 89 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி மும்பையில் நடக்கிறது.
கூட்டம் தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டு விட்டது.
இந்த கூட்டத்தில் 23 விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அவற்றில் முக்கிய அம்சமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை கூடுதலாக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஐ.பி.எல். இல் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கு தொடர்ந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதால் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.ஜி. நிறுவனம் ஏற்கனவே ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் ஒருமித்த ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில், அடுத்த ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகளை பார்க்க முடியும்.