கரவெட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் சடலம் தொடர்ந்தும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி, நுணுவில் பிள்ளையார் கோயிலிற்குஅண்மையிலுள்ள குளத்தில் மூழ்கி நேற்று மாலை மாணவன் உயிரிழந்தார்.
கட்டடைவேலி, கரவெட்டியை சேர்ந்த தே.லக்சன் (18) என்ற மாணவனே உயிரிழந்தார். அவர் நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்தார்.
நேற்று இளைஞர்கள் சிலர் இணைந்து குளத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றியுள்ளனர். பின்னர் மாலை 5 மணியளவில் அவர்கள் குளித்த போது, மாணவன் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற பலத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.
பின்னர் கிராம மக்களின் தேடுதலில் இரவு 7 மணியளவில் மாணவனின் உடல் சேற்றில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டது.
மாணவனின் பெற்றோர் இருவரும் சில வருடங்களின் முன்னர் காலமாகியுள்ளனர். இதன் பின்னர் தனது சகோதரியுடனேயே அவர் வளர்ந்துள்ளார்.