சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின்கீழ் பிரதமர் பதவி வழங்கினால் தான் ஆட்சிசெய்யத் தயார் என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கடமையாற்றத் தயாராக உள்ளீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், மீண்டும் இந்த நாட்டை ஆட்சிசெய்யும் எண்ணம் தனக்கு இல்லையெனவும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்புவதே எனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த செயற்பாட்டை செய்ய முடியும் என்றால், 1970ஆம் ஆண்டு முதல் நன்றாக தெரிந்த ஒருவருடன் இணைந்து தனக்கு கடமையாற்ற முடியாதா என கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற சூழல் ஒன்று உருவாகுமாயிருந்தால், அது என்னுடைய நிபந்தனையின் அடிப்படையிலேயே உருவாகும். அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் தற்போதைய அரசியல் சூழலை நோக்கும்போது எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்கமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கியதேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கிடையில் தற்போது முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்த அவர் இவ்வாறான சூழலில் நாடு முன்னோக்கிச் செல்லமுடியாது எனவும் கவலை தெரிவித்துள்ளார்.