சீரடி சாய்பாபா நடத்திய அற்புதங்களுக்கு அளவே இல்லை. அவரது சொல், செயல் அனைத்தும் அற்புதங்களாக மலர்ந்தன. அவர் பார்க்கும் பார்வை கூட அற்புதம் செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தது.
பாபாவை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார் என்பது உலகம் முழுவதும் வாழும் சாய் பக்தர்களுக்கு தெரியும்.பாபாவை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை. அவரை நாம் ஆத்மார்த்தமாக நினைத்தாலே போதும், அவர் நம் உயிரோடும், உணர்வோடும் ஓடி வந்து ஒட்டிக் கொள்வார்.
பொதுவாக நாம்தான் கடவுளைத் தேடி ஆலயங்களுக்குச் செல்வோம். ஆனால் சாய்பாபா, தம் பக்தர்கள் அனைவரையும் அப்படி எதிர்பார்ப்பது இல்லை. பக்தர்களை வரவழைப்பதற்குப் பதில் அவராகவே அவர்களைத் தேடிச் சென்று விடுவார்.பக்தர்கள் நினைத்துப் பார்க்க முடியாதபடி அத்தகைய அற்புதங்களை பாபா பல தடவை நிகழ்த்தியுள்ளார்.
மராட்டிய மாநிலம் கன்டேஷ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரிய பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எல்லா செல்வங்களும் குறைவின்றி இருந்த போதும், கொஞ்சி மகிழ குழந்தை செல்வங்கள் இல்லாமல் அவர் தவித்து வந்தார்.
அந்த பணக்காரரின் மனைவி மிக, மிக எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். இறை பக்தி மிகுந்தவர். குழந்தை வரம் கேட்டு மராட்டியத்தில் அவர் போகாத கோவில்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு போய் வந்து விட்டார். பெரும்பாலான ஆலயங்களில் அவரிடம் பரிகார பூஜைகள் செய்ய சொன்னார்கள். அத்தனைப் பரிகாரங்களையும் சலிப்பே வராமல் அவர் செய்து முடித்தார்.
ஒரே ஒரு குழந்தை தனக்கு கிடைத்து விடாதா? இவ்வளவு சொத்துக்களையும் கட்டியாள ஒரு வாரிசு கிடைத்து விடாதா என்ற ஏக்கம் அவர் மனதுக்குள் புகைந்தபடி இருந்தது. கணவனும், மனைவியும் எத்தனையோ பரிகாரங்கள் செய்த போதும் குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விரக்தியில் இருந்தனர்.
அப்போது ஒருநாள் ஒரு ஜோதிடர் அந்த கிராமத்துக்கு வந்தார். அந்த பணக்காரரின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த அந்த ஜோதிடர், “உங்கள் ஜாதக அமைப்புப்படியும், உங்கள் மனைவி ஜாதக பொருத்தம்படியும் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் உங்களுக்கு அந்த பிராப்தத்தை கடவுள் கொடுக்கவில்லை. எனவே குழந்தை வரம் கேட்டு நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது வீணான முயற்சியாகும். பரிகாரப் பூஜைகள் செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது” என்றார்.
இதைக் கேட்டதும் அந்த பணக்காரர் மேலும் வேதனைக் குள்ளானார். அவர் மனைவிக்கோ அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறி அழுதாள். அவளை யாராலும் ஆறுதல்படுத்த முடியவில்லை.
அப்போது அந்த பணக்காரர் வீட்டு வாசலில் துறவி ஒருவர் வந்து நின்றார். அவர் “ஒரு ரொட்டி கொடுத்தால், ஒரு குழந்தை கிடைக்கும்” என்றார். திரும்ப, திரும்ப உரத்த குரலில் அவர் அதையே சொல்லிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே துறவி சொன்னது, அந்த பணக்காரரின் மனைவி காதில் விழுந்தது. “குழந்தை கிடைக்கும்” என்ற வார்த்தை அவளைப் புத்துணர்ச்சியான சுய நினைவுக்கு வரவழைத்தது.
கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து வாசலுக்கு ஓடினாள். அங்கு துறவி நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அந்த பெண் கைக்கூப்பி வணங்கினாள்.
அப்போது துறவி, “நீ எனக்கு ஒரு ரொட்டி கொடுத்தால், உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும். நான்கு ரொட்டிகள் கொடுத்தால் உனக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கும்” என்றார்.
துறவியின் வார்த்தையால் அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீட்டு சமையல் அறைக்குள் ஓடினாள். அங்கிருந்து 4 ரொட்டித் துண்டுகளை எடுத்து வந்து துறவிக்குக் கொடுத்தாள். ரொட்டித் துண்டுகளைப் பெற்ற துறவி அந்த பெண்ணை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. பணக்காரரின் மனைவி கர்ப்பம் தரித்தாள். வீடே மகிழ்ச்சியில் மூழ்கியது.
பத்தாவது மாதம் அவள் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அதன் பிறகும் அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் அவளுக்குப் பிறந்தன. எல்லாமே ஆண் குழந்தைகள். நான்கு ஆண் குழந்தைகளும் சிங்கார சிங்கங்கள் போல வளர்ந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனம் போல் காட்சி அளித்த அந்த பணக்காரரின் வீடு பூத்துக் குலுங்கும் சோலைவனம் போல மாறியது.
சில ஆண்டுகள் கடந்தன…
பணக்காரருக்கு குழந்தை பிறக்காது என்று சொன்னாரே அதே ஜோதிடர் மீண்டும் வந்தார். பணக்காரரின் வீட்டுக்குள் 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “இவர்கள் எல்லோரும் யார்? பக்கத்து வீட்டுக் குழந்தைகளா?” என்று கேட்டார். அதற்கு பணக்காரர், “இல்லையில்லை… இவர்கள் எல்லோரும் என் மகன்கள். கடவுள் எனக்குக் கொடுத்த செல்வப் புத்திரர்கள்” என்று பெருமையோடும், மகிழ்ச்சியோடும் சொன்னார். ஜோதிடர் அதிர்ச்சியில் உறைந்தார். புரியாமல் தவித்தார்.
அந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல வீட்டு வாசல் முன்பு அதே துறவி வந்து நின்றார். இப்போதும் அவர், “ஒரு ரொட்டிக் கொடுத்தால் ஒரு குழந்தை கிடைக்கும்” என்றார். அந்த குரலைக் கேட்டதுமே பணக்காரருக்கும், அவர் மனைவிக்கும் பளீரென அந்த துறவியின் நினைவு வந்தது. வீட்டு வாசலுக்கு ஓடோடினார்கள்.
அங்கு நின்ற துறவியைப் பார்த்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கண்ணீர் மல்க அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.
பிறகு அவர்கள் இருவரும் துறவியை முழு மரியாதையுடன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். கூடத்தில் அமர வைத்து எல்லா உபச்சாரங்களும் செய்தனர்.
“சாமி…. உங்களுக்கு நான்கு ரொட்டித் துண்டுகள் கொடுத்த பிறகே எங்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்” என்று கூறினார்கள்.
உடனேஅந்த துறவி சிரித்தபடி “அல்லா மாலிக்“ என்றார். அப்போது கூட அந்த தம்பதிகளுக்கு, தங்கள் வீடு தேடி வந்து அருள் மழை பொழிந்து கொண்டிருப்பவர் கண் கண்ட தெய்வமான சீரடி சாய்பாபா என்று தெரியவில்லை. ஏனெனில் அந்தக் காலக் கட்டத்தில்தான் சாய்பாபாவின் புகழ் மெல்ல பரவத் தொடங்கி இருந்தது. இதனால்தான் அவர்கள் பாபாவை அறியாமல் இருந்தனர்.
பாபாவை யாரோ ஒரு துறவி என்று நினைத்துக் கொண்டு உபசரித்தனர். துறவியை முதலில் குளிக்க வைத்தனர். பிறகு புத்தாடை கொடுத்து அணிய வைத்தனர். வாய்க்கு ருசியான சாப்பாடு கொடுத்தனர். அந்த தம்பதியரின் பணிவான இந்த உபசரிப்பால் துறவி மனம் நெகிழ்ந்தார். கணவன், மனைவி மற்றும் 4 குழந்தைகளையும் ஆசீர்வதித்த துறவி “சீரடிக்கு சென்று வாருங்கள்” என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து சீரடிக்கு செல்ல வேண்டும் என்று மன உந்துதல் அந்த பணக்காரருக்கு ஏற்பட்டது. “சீரடிக்கு எப்படிச் செல்வது?” என்று பலரிடமும் கேட்டு விசாரித்து அறிந்து கொண்டார். சில நாட்கள் கழித்து அந்த பணக்காரர் தம் மனைவி, மகன்களுடன் சீரடிக்குப் புறப்பட்டுச் சென்றார். சீரடியில் சாய்பாபா வசிக்கும் துவாரகமாயி மசூதிக்கு சென்றனர்.
மசூதிக்குள் நுழைந்ததுமே கணவன், மனைவி இருவரும் மின்சாரம் தாக்கியவர்கள் போல அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்கள் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. தங்கள் வீட்டுக்கு வந்த துறவியும், மசூதிக்குள் இருப்ப வரும் அச்சு அசல் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து ஆச்சரியத்தில் திக்குமுக்காடினார்கள். தங்கள் வீட்டுக்கு வந்தது சாய்பாபாவா என்பதை உணர்ந்தும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பாபாவை வழிபடாமலே, அவரே தாமாக முன் வந்து, அதுவும் தங்கள் வீடு தேடி வந்து புத்ரபாக்கியம் அளித்ததை நினைத்ததும் அவர்களால் அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் விட்டுக் கதறி கதறி அழுதனர். அப்படியே பாபாவின் பாதங்களில் விழுந்து, அவர் காலடியை தங்கள் கண்ணீரால் கழுவினார்கள். அவர்களை ஆறுதல்படுத்திய சாய்பாபா சிரித்தபடியே “அல்லா மாலிக்” என்று கூறி ஆசீர்வதித்தார்.
பாபாவை கண் குளிர பார்த்து தரிசனம் செய்து 4 மகன் களுடன் அந்த தம்பதியர் மசூதியை விட்டு வெளியில் வந்தனர். சீரடியைச் சேர்ந்த ஒருவரிடம் “பாபா எப்போதெல்லாம் இந்த ஊரை விட்டு வெளியில் சென்று வருவார்” என்று கேட்டனர். அதற்கு அந்த நபர், “பாபா எப்போது சீரடியை விட்டு அகன்றார்? அவர் இந்த ஊரை விட்டு வெளியில் எங்குமே சென்றதே இல்லை” என்றார்.
இதைக் கேட்டதும் அந்த தம்பதியர் பிரமிப்பின் உச்சத்துக்கு சென்றனர். சீரடியில் இருந்தபடியே தங்கள் வீட்டுக்கு பாபா வந்து சென்றதை அறிந்து வியந்தனர்.
மசூதியை நோக்கி மீண்டும் ஒரு தடவை கைக் கூப்பி வணங்கி விட்டு தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் சிலர் சாய்பாபாவே கதி என்று சீரடி மசூதியில் சரண் அடைந்து கிடந்தனர்.
தங்கள் கடைசி மூச்சு வரை அவர்கள் பாபாவிடம் இருந்து பிரியவில்லை. அவர்களில் சென்னையைச் சேர்ந்த சன்னியாசி விஜயானந்தும் ஒருவர்.
அவருக்கு முக்தி அளித்த பாபா ஒரு புலிக்கும் முக்தி அளித்தார். இவை பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.