2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு திறந்த அழைப்பு விடுத்திருந்தார்.
இருப்பினும், இந்தியா செல்வதற்கு தனக்கு எந்த திட்டமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்தபோது, எந்த நேரத்திலும் இந்தியா வரமுடியும் என தன்னிடம் கூறியே அழைப்பை விடுத்திருந்தார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் மோடி, இலங்கை வந்தபோது கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி, ஒரு திறந்த அழைப்பை விடுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து, மஹிந்த சீனா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கே விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.
தன்னை கவிழ்க்க இந்தியா சதி செய்து வருகின்றது என்றும் மஹிந்த சுட்டிக் காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.