இந்தி பட உலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். பலமுறை தமிழ்படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். என்றாலும், அதற்கான வாய்ப்பு இதுவரை அவருக்கு அமையவில்லை. இப்போது அதற்கான முயற்சி நடந்து வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா – நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிவன் தமிழ்வாணன். இவர் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கினார். இதற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரை வைக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரில் ஏ.வி.எம். தயாரித்த சிவாஜி படம் ஒன்று உள்ளது. எனவே இந்த தலைப்புக்கு ஏ.வி.எம். நிறுவனத்துடன் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபெரிய மனிதர் ஒருவரைப்பற்றிய கதை. எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றாலும் பெரிய மனிதரை சுற்றியே கதை நடக்கிறது. எனவே இந்த பாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கதையை அமிதாப் பச்சனுக்கு அனுப்பி உள்ளனர். நிச்சயம் அவர் இந்த படத்தில் நடிப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.