மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் கருதப்படும் கார்த்திகை மலர் வைக்கப்பட்டமை குறித்து இராஜதந்திர முறையில் இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை ஐக்கிய இராச்சிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க உள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீர் தினத்தை நினைவுகூரும் ஒரு பகுதியாக இந்த சின்னம், பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கடந்த நவம்பர் 26ஆம் திகதி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை நாளை தமது அமைச்சில் சந்தித்து இது தொடர்பில் அதிருப்தியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இது தொடர்பில் கொழும்பின் ஊடகம் ஒன்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயகத்திடம் வினவிய போது, தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆர்ப்பாட்டங்களை நிர்வகிப்பது பொலிஸாரின் பொறுப்பாகும் என பதிலளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.