உணவை பொறுத்தவரை நன்றாக மென்று சாப்பிட்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
இதை உணர்ந்து அதையே கடைப்பிடித்தவர்கள் நம் பெரியோர்கள். அதையே இன்று ஊட்டச்சத்து மற்றூம் சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இது என்ன சாப்பாட்டை மென்று தான் சாப்பிட முடியும் என்று கேட்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் உணவை மென்று சாப்பிடுவதில்லை என்பதுதான் உண்மை.
அவசர அவசரமாக விழுங்கி, நின்று கொண்டு சாப்பிடுவதால், ஜீரணம் ஆகாமல் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டால் உடல் அற்புதமான நன்மைகள் பலவற்றையும் பெறுகிறது. அப்படி என்னென்ன நன்மைகள் உடல் பெறுகிறது என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியமான எடை
உடல் எடை அதிகரிக்க கூடாது என்று நினைப்பவர்கள் எந்த உணவை சாப்பிடுகிறோம் என்று கவனம் செலுத்துவதை விட எப்படி சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.
உணவை மென்று பொறுமையாக சாப்பிடும் போது உடனடியாக சாப்பிட முடியாது. அவசரமாக சாப்பிடுவதை காட்டிலும் குறைந்தது 8 முதல் 10 நிமிடங்களாவது ஆக கூடும்.
இதனால், அதிகமான உணவு உள்ளே செல்வது தடுக்கப்படும். ஏனெனில் பொறுமையாக மென்று சாப்பிடும் போது மூளை உணவு நிறைவாக பெற்ற உணர்வை உங்களுக்கு அளிக்கிறது.
அதே நேரம் அதிகமாக சாப்பிடும் போது மூளை உங்களுக்கான பசி உணர்வை மேலும் இருப்பதாகவே காட்டுகிறது.
இதனால் வழக்கமான தெவையான உணவை காட்டிலும் கூடுதல் கலோரிகளை உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் எடை அதிகரிக்கவே செய்யும். பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். குறைவாகவே சாப்பிடுவீர்கள்.
கொழுப்பு சேராது
உடலில் கொழுப்புகள் சேர்வதுதான் நோய்க்கான அடித்தளமே. இந்த கொழுப்புகள் சேராமல் தடுக்கவே மென்று சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
நாம் உணவை உமிழ்நீரோடு மென்று சாப்பிடும் போது உமிழ்நீரில் இருக்கும் சில நொதிகள் உணவை உடைக்க செய்கிறது.
உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படும் சுரப்பிகளில் லிபேஸ் என்னும் நொதியும் ஒன்று. இது உணவில் இருக்கும் கொழுப்பை உடைக்க செய்கிறது.
உணவை உமிழ்நீரோடு கலந்து நன்றாக மென்று கூழ் போல் ஆக்கி சாப்பிடும் வரை இந்த நொதி வெளிப்படும். அப்போது கொழுப்புகள் முழுவதுமாக உடைக்கப்படும்.
சத்துக்கள்
பெரும்பாலான சத்துகளும், தாதுக்களும் நாம் உண்ணும் உணவின் மூலமே பெறப்படுகிறது. பலவிதமான சத்து நிறைந்த பொருள்களை சேர்த்து உணவாக எடுத்துகொள்கிறோம்.
இரும்புச்சத்து, புரதம், கால்சியம், துத்தநாகம் என இன்னும் பல வகையான சத்துகள் இதில் உள்ளது. இதில் புரதங்கள் மிக முக்கியமானவை. இது உடலில் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது.
இது உடலின் வளர்ச்சிக்கு முக்கியமானவதும் கூட. ஆனால் இதை உடல் சேமித்துவைக்க முடியாததால் இதை உடல் தேவையான அளவு நிறைவாக பெற வேண்டும்.
உணவை மென்று சாப்பிட்டால் தான் உணவில் இருக்கும் இந்த சத்துகள் உறிஞ்சப்படுகிறது. இல்லையெனில் இந்த சத்துக்கள் உறிஞ்சப்படாமல் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் தடைபடவும் செய்யும்.
இறுதியாக உணவை மென்று சாப்பிடுவதன் மூலம் உடல் பெறும் நன்மைகள் குறித்து பார்த்தோம்.
இந்த நன்மைகள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் போது உணவுக்கு நடுவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதோ அல்லது வேறு பானங்கள் இடையில் குடிப்பதோ தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும் போது கவனம் முழுவதும் சாப்பாடு மீது மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான அளவான உணவை எடுக்க முடியும். ஒவ்வொரு கவளத்தின் மீதும் கவனம் கொண்டால் மட்டுமே உணவை மென்று சாப்பிட முடியும்.