இந்திய அணியில் நடராஜன் சிறப்பாக பந்து வீசி வருவதால், இனி இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் தங்கராசு நடராஜன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவரை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சர்ச்சைக்கு பெயர் போன வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
ஏனெனில், நடராஜன் விளையாடும் போது, இவர் பந்து வீச்சு எப்படி இருக்கும் என்பது போன்று விமர்சித்திருந்தார். ஆனால் இப்போது அவரே நடராஜனை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதற்கு பெயர் தான் அந்தர் பல்டி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவர் கூறுகையில், நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவரை மட்டுமே குறுகிய ஓவர் போட்டிகளில் வைத்து விளையாட முடிவு செய்திருக்கும்.
ஷமி தற்போது காயத்தில் இருக்கிறார். அப்படியே காயத்திலிருந்து மீண்டாலும் டி20 போட்டியில் மீண்டும் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். நடராஜன் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்தியாவில் யாரும் போட முடியாத யார்க்கர் பந்துகளை அச்சு அசலாக ஆணித்தரமாக வீசுகிறார்.
இப்படி பார்த்தால் பும்ரா ஒரு பக்கமும் தங்கராசு நடராஜன் ஒரு பக்கமும் பந்து வீசுவதை கோஹ்லி விரும்புவார். ஒருபக்கம் வலது கையில் வீசினால் நடராஜன் ஒருபக்கம் இடது கையில் வீசுவார். இதுதான் மிகச் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.