கிளிநொச்சியைச் சேர்ந்த கோவிந்தன் மோகனதாஸ் கொரோனா என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இயற்கையாக மரணமடையவில்லை எனவும் வைத்தியசாலை தான் கொண்று விட்டது என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் தனது முகநூலில் ப்திவிட்டுள்ளதாவது,
எனது சித்தப்பா கோவிந்தன் மோகனதாஸ் இறைபாதமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையில் இவர் நெஞ்சுநோ காரணமாக அனுமதிக்கப்பட்டார். வைத்திய அதிகாரிகள் இவரை கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் தனியறையில் பூட்டி வைத்துள்ளனர். நேரடியான வைத்திய கண்காணிப்பு இன்மையால் பூட்டிய அறைக்குள்ளேயே இறந்து கிடந்துள்ளார். அதிகாரிகளின் அலட்சியத்தால் நான் சித்தப்பாவை இழந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
அத்துடன் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுவரை கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் தனிமைப்படுத்தல் விடுதியில் விடப்பட்டவர் காலையில் சடலமாக காணப்பட்டார்.
இதேவேளை மோகனதாஸ் என்பவரின் சடலத்திற்கு பதிலாக செல்வராசா என்பவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையினால் வழங்கப்பட்டதோடு அவரின் 15 வயதான மகள் சடலம் மாறி வந்ததை அவதானித்ததை தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகம் சடலத்தை மாற்றி கொடுத்திருந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
மேலும் மோகனதாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி இல்லையென முடிவும் வெளியாகி உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து இன்று மதியம் 2 மணியளவிலே அவரது சடலம் அவர்களின் முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்தவாரம் இதே வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி அவசர சிகிச்சை எனக் காரணம் காட்டி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டபின் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அப்போது தனிமைப்படுத்தல் விடுதியில் ஏன் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இருப்பினும் அது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளமை மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வைத்தியசாலைகளில் நெஞ்சுவலி போன்ற ஆபத்தான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு பி.சீ.ஆர் முடிவுகள் வரும்வரையில் சிகிச்சை வழங்காது காத்திருக்க முடியாது என்பதால் அவ்வாறான நோயாளர்களுக்கு அன்ரிஜின் (antigen) சோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இருபது நிமிடங்களில் கொரோனா உண்டா இல்லையா என அறிய முடியும்.
இந்த அன்ரிஜின் பரிசோதனைக்குரிய மருந்துகள் மற்றும் கருவிகள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரேயே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுவிட்ட போதிலும் இன்றுவரை அவை பாவிக்கப்படாமலே வைக்கப்பட்டுள்ளன.
அசமந்தமான நிர்வாக சூழல் காரணமாக ஏற்படும் இந்த தவறுகள் உடனடியாக திருத்தப்படாவிட்டால் கிளிநொச்சியில் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படலாம் எனவும் நிர்க்கதியாய் இருக்கும் குடும்பத்திற்கு யார் ஆறுதல் கூறுவது எனவும் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.