ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி நகைப்பணம் பறித்து வந்த ஐடி ஊழியர் ஒருவர், செல்போன் வீடியோ மூலம் கையும் களவுமாக, 6வதாக திருமணம் செய்த இளம் மனைவியிடம் சிக்கியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள சந்தாநகர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் விஜய பாஸ்கர். இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வீட்டில் ஒரு மனைவி இருக்க இந்த திருமணத்தை மறைத்து விஜயபாஸ்கர் முகநூலில் பெண் வேட்டை நடத்தியுள்ளார்.
முகநூலில் அறிமுகமாகும் மென்பொருள் துறையில் பணிபுரியும் பெண்கள் தான் இவரது முதல் இலக்கு.. ஏனென்றால் அவர்கள் தான் வங்கி கணக்கில் பணமும், வீட்டில் நகையும் சேர்த்து வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நட்பாக பழகி காதல் வலையில் வீழ்த்துவார்.
பின்னர் ஆசை வார்த்தை கூறி திருமணம் வரை அழைத்துச்சென்று, சாமர்த்தியமாக பேசி தனது இச்சையை தீர்த்துக் கொண்டு நகைப்பணத்துடன் கம்பி நீட்டி விடுவது விஜயபாஸ்கரின் வாடிக்கை!
முதல் மனைவி தவிர 4 கணினி மென் பொறியாளர்களுக்கு இனிப்பான பேச்சால் அல்வா கொடுத்து நகை பணம் பறித்த இவர், 6வதாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த செளஜன்யா என்ற பெண்ணிடம் தனது வேலையை காட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அந்த பெண் உஷாராக இருந்து மன்மதன் விஜயபாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவன் அடிக்கடி வீட்டில் இல்லாமல் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிவருவதை கண்டறிந்த மனைவி சவுஜன்யா, அவரது செல்போனை எடுத்து பார்த்த போது அவர் சிவானி என்ற பெண்ணிற்கு வீடியோ மூலம் புதிதாக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கணவரின் அமாவாசை சேட்டை குறித்து தனக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினரிடம் தெரிவிக்க ஆக்ரோச மானவர்களால் சிறப்பாக நடந்தது மாப்பிளை அழைப்பு!
அடிக்கு அடி உதைக்கு உதை என தலைமுடி கலையக் கலைய கிடைத்த கவனிப்பால் 6 பெண்களிடம் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததோடு, மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டார் விஜயபாஸ்கர்!
ஐ.டி மாப்பிள்ளையை அடித்துத் துவைத்த கையோடு அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை ஆறு பெண்களை விஜயபாஸ்கர் ஏமாற்றிப் பணம் பறித்தது வந்தது தெரியவந்துள்ளதையடுத்து இவர் மூலம் ஏமாந்த பெண்களிடம் புகார் பெற்று ஐ.டி மாப்பிள்ளைக்கு தனித்தனியாக விருந்து வைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.