தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சாணக்கியன் மற்றும் சுமந்திரன் போன்றோர் பொது இலக்கில் ஒன்றாக செயற்படுகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் இரு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வரவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா? அல்லது வரவில்லையா என்பதை அவர்களிடம் தான் கேட்க முடியும்.
அவர்களுக்குரிய அறிவித்தல் முறையாகவே கிடைக்கின்றது. நாடாளுமன்றில் 13 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திசைவாகவே செயற்படுகின்றனர். சாணக்கியன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் கூட பொது இலக்கில் செயற்படுகின்றனர்.
கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுமந்திரன், சிறீதரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் சபைகளில் ஆவேசமாக பேசுகின்றனர். முன்னர் அடக்கிவாசித்தார்கள். நாட்டில் அடக்குமுறை அதிகரித்ததால் அவர்களும் ஆவேசமடைந்துள்ளனர்.
கஜேந்திரகுமார், சாணக்கியன் போன்றோர் சரத் வீரசேகரவிற்கு எதிராக நாடாளுமன்றில் பதிலளிக்கும் போதே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பொன்சேகாவும் தனது கடும் எதிர்பை வெளியிட்டிருந்தார்.
கூட்டமைப்பை தடை செய்வது என்பது மேலோட்டமான பேச்சே ஜனநாயக நாட்டில் தாம் நினைத்தபடி ஒரு கட்சியை தடைசெய்ய முடியாது. தடைசெய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.