பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 14 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள பராபஜாரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் கடை ஊழியர்கள் நேற்றுக்காலை 10 . 30 மணியளவில் வழக்கம்போல் கடையை திறந்து தங்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்குள் துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்கள் கடை ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் இருந்த நகைகளை மூடைகட்டிக்கொண்டு, கல்லாவில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற நகைகளின் மதிப்பு மட்டும் சுமார் 5 கோடிக்கும் அதிகமாக இருக்குமென கூறப்படுகிறது. மேலும் இந்த கொள்ளைச்சம்பவம் வெறும் 10 நிமிடங்களில் நடந்து முடிந்ததாகவும், கொள்ளையர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
அத்தோடு கொள்ளையடித்த நகைகளை மூடைகட்டிக்கொண்டு கொள்ளையர்கள் தெருவில் ஓடும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.