2018 மே மாதத்தில் சஹ்ரான் பயங்கரவாத குழுவினரின் பயிற்சி முகாம் குறித்த தகவல்களை வழங்கிய ஒரு நபரை நுவரெலிய பொலிஸ் அதிகாரிகள் மௌனமாக்க முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ஒருவர் இதனை வெளிப்படுத்தினார்.
ஆணைக்குழு முன் சாட்சியமளித்த நுவரெஎலியாவைச் சேர்ந்த டி.டி.இலிசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் அவரைச் சந்தித்து, தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பயிற்சி முகாம் பற்றி எதையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று சொன்னதாகக் கூறினார்.
இலசிங்கவின் வாக்குமூலத்தின்படி, தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் மற்றும் வழிகாட்டியான நௌபர் மௌலவி ஆகியோர் முகாமில் பங்கேற்றனர்.
மே 08,2018 அன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் பயிற்சி முகாமை நடத்திய ஒரு விடுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய எதையும் நுவரெலியா போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை, அங்கிருந்தவர்கள் தப்பியிருந்தது ஏற்கனவே ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த இலிசிங்க, 2018 மே 05 அன்று நான்கு வெள்ளை வாகனங்களில் நுவரெலியாவின் தக்ஷில ஹொலிடே இன் விடுதியில் குழு ஒன்று வந்ததாகவும், அவர்கள் ஒருபோதும் அந்த வளாகத்தை விட்டு வெளியேறவில்லை என்றும் கூறினார்.
“தக்ஷில ஹொலிடே இன் என் வீட்டிற்கு அருகில் இருந்தது. மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலல்லாமல், இவர்கள் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியேறவில்லை. இரவில் விளக்குகளை அணைத்துவிட்டார்கள்” என்று அவர் கூறினார்.
அவர் விடுதியின் உரிமையாளர்களுடன் பேசியதாகவும், அவருக்கு தமிழில் உரையாட முடியுமென்பதால் உரிமையாளர்கள் அந்த தளத்தை சரிபார்க்கும்படி கேட்டதாகவும் கூறினார்.
“நான் வீட்டிற்குள் செல்லும்போது ஒரு உரையாடலைக் கேட்டேன். வீட்டிலுள்ள ஒருவர் ‘வீட்டில் பணத்தையும் ஆயுதங்களையும் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல. நாங்கள் மீண்டும் காத்தான்குடிக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த அப்துல்லா என்ற நபர் ‘ஆயுதங்களை கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல’ என்று கூறினார்” என்று இலசிங்க தெரிவித்தார்.
அவர் 119 ஐ அழைத்ததாகவும், நுவரெலியா காவல் நிலையத்தில் ஒரு அதிகாரியைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். பின்னர் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் புஜித் ஜெயசுந்தரவின் தொடர்பு எண்ணை அறிந்து, அவரை அழைத்ததாக கூறினார்.
“பின்னர் ஐ.ஜி.பி எனக்கு எஸ்.பி.மஹிந்த திசாநாயக்கவின் தொடர்பு எண்ணைக் கொடுத்தார். நான் அவரைத் தொடர்பு கொண்டபோது, நுவரெலியா பொலிசார் விரைவில் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று கூறினார். இருப்பினும், மாலை 4.30 மணியளவில் ஒரு பொலிஸ்கார் வந்தது, அவர்களால் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை” என்று அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு எஸ்.ஐ. இந்திரஜித் மற்றும் நுவரெலியா காவல்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று சந்தேக நபர்களைக் கைது செய்யத் தவறியதை ஏற்றுக்கொண்டதாக சாட்சி மேலும் கூறினார்.
அவர்கள் என்னிடம் சொன்னார்கள்- “இந்த விசயங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது. நான் அப்படி ஏதாவது செய்திருந்தால் ஐ.எஸ்.ஐ.எஸ் என்னைக் கொல்லும் என்றார்கள். நான் சொன்னேன், ஐ.எஸ்.ஐ.எஸ் என்னை ஒருபோதும் கொல்லாது என்று எனக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக காவல்துறை அதை செய்யும்“ என்றார்.