நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவர் மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம். பூர்வஜென்மத்தில் அவர் புண்ணியம் செய்திருக்கிறார்.
நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, “நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்” என்று சொன்னார். எனக்கு பிடித்த பாடகர் முகமது ரபி. அவரை அடுத்து எனக்கு பிடித்தமான பாடகர் ஜேசுதாஸ் அண்ணா. நான் எதிர்பார்த்ததற்கு மேலாக கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடிவிட்டேன். பல நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறேன். சில அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன். என் உயர்வுக்கு காரணம், படத்தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், சக பின்னணி பாடகர், பாடகிகள், நடிகர்-நடிகைகள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:-
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள்.
நான் பாரிஸ் நகரில் ஒருமுறை கச்சேரி செய்துவிட்டு, ஓட்டலுக்கு திரும்பியபோது சாப்பாடு எதுவும் இல்லை. ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு பசியாறலாம் என்று ஆப்பிள் பழத்தை கையில் எடுத்தேன். அப்போது “ரூம் சர்வீஸ்” என்று ஒரு குரல் கேட்டது. கதவை திறந்துபார்த்தால், கையில் சாப்பாடு பிளேட்டுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நின்றுகொண்டிருந்தார். அன்று நான் சாப்பிட்டது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சாப்பாடு.
மேற்கண்டவாறு ஜேசுதாஸ் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், அவருடைய மனைவி அபர்ணா ஆகிய இருவரும் செய்து இருந்தார்கள்.