நில அதிர்வுகள் பதிவாகும் இடங்களில் கண்காணிப்பு இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவானமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இந்த நடவடிக்கை, அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பயன்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த நிலஅதிர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அடுத்த வாரமளவில் கூடவுள்ளது.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொலவின் தலைமையில் 11 பேர் கொண்ட நிபுணர் குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நிலஅதிர்வு பதிவாகுமாயின், அதனால் எற்படக்கூடிய சேதங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் நிலஅதிர்வு தொடர்பான நிபுணர் குழுவினால் ஆராயப்படவுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.