கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்களையும் வர்த்தகர்களையும் விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்று (12) சனிக்கிழமை நடைபெற்றது.
“நாமும் பாதுகாப்பு பெற்று மற்றவர்களையும் காப்போம்” கொரோனாவை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன், பிராந்திய தொற்றுநோய் பொறுப்பதிகாரி வைத்தியர் என்.ஆரிப், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.அஜ்வத், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜீவா, கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்க பொதுச் செயலாளர் எம்.எப்.ஏ.பாசித் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“கொரோனாவை வெற்றிகொள்வோம்” பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நுகர்வோரை வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.