இலங்கை வெகுவிரைவில் சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகிறது எனவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன்,
கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர்,
நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
சகல தொழில் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது, கடந்த எட்டு மாதங்களில் 3 வீதமே வாகன இறக்குமதி செய்யப்பட்டுள்ளது,
நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இறக்குமதியை தடை செய்வதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில் உலக நாடுகள் இதற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
இறக்குமதியை நிறுத்தினால் ஏற்றுமதியும் தடைசெய்யப்படும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடன் நெருக்கடி நிலைமையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தில்,
எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை, வெறுமனே ஏமாற்று வேலைத்திட்டமொன்றையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
வீதி அபிவிருத்திக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது, நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என அரசாங்கம் கூறுகின்றது,
இப்போதே சில இடங்களில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.
இன்று நாட்டிற்கு வீதி அபிவிருத்தியா அவசியம்?, நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு முழுமையான வருமானம் இல்லாத நிலையில் வீதிகளை அபிவிருத்தி செய்து மக்கள் பயன் பெறுவார்களா?
அரசாங்கம் வீதி அபிவிருத்தியை வைத்து அடுத்த மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.
அரசாங்கம் புதிய பணத்தை அச்சடித்து நிலைமைகளை கையாள நினைக்கின்றது டிசம்பர் வரையில் 130 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இது நவீன பொருளாதார நகர்வு என கூறினாலும் சிம்பாவே நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படப்போகின்றது. புதிதாக பணம் அச்சடித்ததன் விளைவையும் அடுத்த ஆண்டில் பார்க்கத்தான் போகின்றோம்.
அரச நிறுவனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வீழ்ச்சி கண்டு வருகின்றது, நல்லாட்சியில் இலாபமடைந்த 11 நிறுவனங்களும் நஷ்டமடைந்துள்ளது. இவற்றை மீட்டெடுக்க தெரியாது அரச சொத்துக்கள் விற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பில் பல நிலங்களை சர்வதேசத்திற்கு விற்கப்படவுள்ளது, நாட்டில் முக்கியமான இடங்களையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது. இதனால் சமூகத்தில் பாரிய வெடிப்பொன்று உருவாகப்போகிறது என்றார்.