பிரித்தானியா 11 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு சமம், அதை பகைத்துக்கொள்வது நமக்கு நஷ்டத்தைத்தான் கொடுக்கும் என ஜேர்மனியிலிருந்து அறிவார்ந்த குரல் ஒன்று ஒலித்துள்ளது.
பிரித்தானியா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பழைய உறுப்பு நாடு மட்டுமே என்று வெகு சாதாரணமாக கூறிவிட முடியாது, ஏனென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 சிறு உறுப்பு நாடுகளை ஒன்றிணைத்தால், அவை 11ஐயும் விட பிரித்தானியா பெரியது.
ஆகவே, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உறுப்பு நாட்டை இழக்கவில்லை, மாறாக அது 11 நாடுகளை இழந்து, 16 உறுப்பு நாடுகளாக சுருங்கியுள்ளது என்கிறார் ஜேர்மனியின் மிகப்பெரிய செய்தித்தாளான Bildஇன் ஆசிரியர் Alexander Von Schoenburg.
இப்போது நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் நிற்கிறோம், வெள்ளிக்கிழமை பேசிய ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Heiko Maas, இப்போது நாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறினால் எதிர்கால தலைமுறைகள் நம்மை சபிக்கும் என்று கூறியுள்ளார் என்கிறார் Alexander.
தன் பக்க லாபத்தை மட்டுமே பார்க்கும் பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெட்டிக்கொண்டு செல்லவே முயற்சிக்கும் நிலையில், ஒட்டு மொத்த ஜேர்மனியின் குரலாக ஒலித்துள்ளது பத்திரிகையாளர் Alexanderஇன் குரல்.
பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் தொடங்கியதிலிருந்தே, அது தொடர்பாக இரு வித அணுகுமுறைகளைக் காணமுடிந்தது.
ஒன்று, ஜேர்மன் பகுதியில், அவர்கள் நார்வே அல்லது சுவிட்சர்லாந்துடன் செய்யப்பட்டதைவிட சிறந்த ஒரு ஒப்பந்தத்தை பிரித்தானியாவுடன் செய்துகொள்ளவே எப்போதும் ஆர்வம் காட்டினார்கள்.
இரண்டாவது, பிரான்ஸ் பக்கத்து அணுகுமுறை. அவர்கள், பிரித்தானியாவை தண்டிக்கவேண்டும், அவர்களுக்கு நடப்பதைக் கண்டு மற்ற நாடுகள் பயந்து இனி யாரும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்ற விதத்திலிருந்தது அவர்களது அணுகுமுறை.
பிரெக்சிட் தொடர்பில் பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோர் இருவர். ஒருவர் Michel Barnier, அவர் ஒரு பிரான்ஸ் நாட்டு அரசியல்வதி. அடுத்தவர் Ursula von der Leyen, அவர் ஒரு ஜேர்மன் நாட்டு அரசியல்வாதி.
இவர்கள் இருவருமே பிரெக்சிட் தொடர்பில் பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், Barnier பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம், அது பிரித்தானியாவுக்கு வெறுப்பூட்டும் விதத்தில்தான் அமைந்திருந்தது.
அவரது சகா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதால் Barnier தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிரித்தானியாவுடன் நல்ல ஒரு ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால், அது பிரான்சைவிட ஜேர்மனிக்கு பெரும் இழப்பு என்கிறார் Alexander.
ஏனென்றால், ஜேர்மனி கடந்த ஆண்டில் மட்டுமே 60 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்களை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இதற்கிடையில், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் ஒரு நாட்டின் தலையீடு மற்ற உறுப்பு நாடுகளின் நன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், எந்த நாட்டின் தலையீடுமின்றி ஐரோப்பிய ஆணையம் மட்டுமே பிரித்தானியாவுடன் கடைசி நேர பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக Ursula தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது. (மறைமுகமாக அவர் பிரான்சைக் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்).
ஆகவே, அவர் தன் சக நாட்டவரான பிரான்சை விட ஒரு படி மேலே போய் பிரெக்சிட் விடயத்தில் நல்ல முடிவெடுப்பார் என நம்பலாம்.